நாட்டை வந்தடைந்துள்ள மசகு எண்ணெய் கப்பலொன்று கடந்த 40 நாட்களாக கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பலுக்கான தாமதக் கட்டணமாக 67 கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.
இக்கப்பலிலிருந்து மசகு எண்ணெய் தரையிறக்கப்படாமைக்கான காரணம் என்ன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அத்தோடு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற இது போன்ற பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கும் , மக்கள் மீது பிரயோகிக்கப்படுகின்ற அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு சுதந்திர கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள சு.க. தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை ஒருபுறம் வைத்து விட்டு, மக்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.
கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட மக்கள் அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாமையினாலேயே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து ஆட்சி மாற்றத்தைக் கோரினர். மக்களால் இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இவ்வாறான மக்கள் போராட்டங்களினால் ஆட்சியைப் பொறுப்பேற்ற அரசாங்கம் தற்போது ராஜபக்ஷக்களை பாதுகாப்பதற்காக மக்களின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் மீதான இவ்வாறனா அடக்குமுறைகளை உடனடியாகக் கைவிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
நாட்டை வந்தடைந்த மசகு எண்ணெய் கப்பலொன்று கடந்த 40 நாட்களாக கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது. 40 குறித்த கப்பலுக்கான தாமதக் கட்டணமாக 67 கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.
இந்த கட்டணம் அப்பாவி பொது மக்களிடமிருந்து வரிப்பணத்திலேயே கட்டப்படவுள்ளது. குறித்த கப்பலில் சுமார் 100,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் காணப்படுகிறது. குறித்த நிலக்கரியை தரையிறக்கியிருந்தால் சுத்தீகரிப்பு பணிகளை தடையின்றி முன்னெடுத்திருக்க முடியும்.
அரசாங்கத்தின் இது போன்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். பொதுஜன பெரமுன , ஐக்கிய தேசிய கட்சி இணைந்து அமைத்துள்ள அரசாங்கத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சு.க. ஆதரவளிக்காது. மாறாக ராஜபக்ஷ குடும்ப ஆட்சியையும் , ஐ.தே.க. அரசாங்கத்தையும் எதிர்க்கும் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து நாம் பாரிய கூட்டணியொன்றை உருவாக்குவோம்.
எல்லை நிர்ணயம் தொடர்பில் தற்போது பேச ஆரம்பித்துள்ளமைக்கான காரணம் தேர்தலைப் பிற்போடும் நோக்கத்திலேயே ஆகும். அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு தேர்தல் ஆணைக்குழு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றோம். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தெரிவுக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தி , அதற்கமைய தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம் என்றார்.