சுவிற்சர்லாந்தில் உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் சேவை

153 0

உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் சேவையை சுவிஸ் ரயில்வே நிறுவனம் ஒன்று சனிக்கிழமை இயக்கியுள்ளது.

ஆல்ப்ஸ் மலையோரம் அமைந்துள்ள பிரெடா முதல் பெர்குவென் வரை உள்ள அல்புலா/பெர்னினா பாதையில் ரெசின் ரயில்வே நிறுவனம் 1.9-கிலோமீட்டர் நீளமுள்ள (1.2-மைல் நீளம்) ரயிலை 100 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கியுள்ளது.

இந்த பாதை 2008 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டது. இந்த பாதை 22 சுரங்கங்கள் வழியாக செல்கிறது. அவற்றில் சில மலைகள் வழியாகவும், வளைந்த சுண்ணாம்பு பாலங்கள் உட்பட 48 பாலங்கள் வழியாகவும் செல்கிறது.

சுமார் 25 கிலோமீட்டர்கள் (15.5 மைல்கள்) தூரம் செல்லும் முழு பயணம் முடிய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. 25 பிரிவுகள் கொண்டு ஆல்ப்ஸ் மலைகள் வழியாக செல்லும் இந்த பாதையில் ரயில் பயண ஆர்வலர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் சில பொறியியல் சாதனைகளை முன்னிலைப்படுத்தவும், சுவிஸ் ரயில்வேயின் 175 ஆண்டுகளைக் கொண்டாடவும் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ரெஸியன் ரயில்வே இயக்குநர் ரெனாடோ ஃபாசியாட்டி தெரிவித்துள்ளார்.