வரிச் சுமைகளை மக்கள் மீது சுமத்தும் வகையில் அமைந்தால் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவில்லை

137 0

பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் பொருளாதார மீட்சிக்கான வேலைத்திட்டங்களையும் , மக்களுக்கான நிவாரணங்களையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட வேண்டும்.

அவ்வாறில்லை எனில் அதனை ஆதரிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் பொருளாதார மீட்சிக்கான வேலைத்திட்டங்களை கொண்டதாக அமைய வேண்டும் என்பதோடு , பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணம் வழங்குவதாகவும் அமைய வேண்டும். மாறாக மக்கள் மீது மேலும் வரி சுமைகளை சுமத்துவதாக அமைந்து விடக் கூடாது.

மேற்கூறப்பட்ட விடயங்கள் வரவு – செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே, அதற்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஆராய்வோம்.

அவ்வாறில்லை எனில் அதனை எதிர்க்க நேரிடும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இன்னும் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே காணப்படுகிறது. கடன் மறுசீரமைப்பிற்கு இனக்கம் காணப்பட்டால் மாத்திரமே அதன் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் போது கடன் வழங்கிய நாடுகள் அவற்றின் நன்மைகளைக் கருத்திற் கொண்டே செயற்படும்.

எனவே அவை கடும் நிபந்தனைகளை எமக்கு விதிக்கக் கூடும். இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் கடும் வரி சுமைகளை அரசாங்கம் மக்கள் மீது செலுத்திக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு வரிகளை அதிகரிப்பதற்கு பதிலாக ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்த முடிந்தால் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.