பொதுஜன பெரமுனவிலுள்ள பலர் மீண்டும் சு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்!

85 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களே தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளனர். அவ்வாறானவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் எம்முடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். சகல பேதங்களையும் துறந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக பலத்தை அனைவரும் வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டது. முந்தைய கலந்துரையாடல்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று நான் கேட்கவில்லை.

தற்போது சுதந்திர கட்சிக்குள் இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. சுதந்திர கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களே தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளனர்.

பொதுஜன பெரமுனவிலுள்ள பெரும்பாலானவர்கள் மீண்டும் சுதந்திர கட்சியுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே சுதந்திர கட்சிக்குள் தற்போது காணப்படுகின்ற இருவேறு நிலைப்பாடுகளை எம்மால் ஒன்றிணைக்க முடியும்.

அனைவரையும் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான செயற்திட்டத்திற்கு சுதந்திர கட்சி தலைமைத்துவத்தை வகிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். நாட்டின் பிரச்சினைக்கு தீர்வாகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தை பரிந்துரைத்தது.

எனவே தினந்தோரும் ஈடுபடும் விமர்சன அரசியலுக்கு அப்பாற் சென்று அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை எவ்வாறு மீளக் கட்டியெழுப்புவது என்பதில் அவதானம் செலுத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டணி அரசாங்கமே இலங்கையை அதிகம் ஆட்சி செய்துள்ளது. எனவே நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ராஜபக்ஷக்கள் மீது குற்றஞ்சாட்டுவதைப் போன்றே, அவர்களை பாதுகாத்த மீண்டும் மீண்டும் அவர்களை தெரிவு செய்து ஆட்சியமைத்த எம் அனைவருக்கும் பொறுப்பு காணப்படுகிறது.

எவ்வித பேதமும் இன்றி நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான பலத்தை அனைவரும் வழங்க வேண்டும். நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் கட்சியின் தீர்மானங்களுக்கு அமையவே செயற்பட்டுள்ளோம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியிலிருந்து விலகி பிரிதொரு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடவில்லை. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றார்.