ஈரானில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பிரபல சமையல் கலை நிபுணரான மெஹர்ஷாத் ஷாஹிதி, பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. இந்த நிலையில், 19 வயது ஈரானின் பிரபல சமையல் கலை நிபுணரான மெஹர்ஷாத் ஷாஹிதி ஈரான் பாதுகாப்புப் படை தாக்குதலில் மாராடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின்போது மெஹர்ஷாத் ஷாஹிதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை ஈரான் பாதுகாப்புப் படையினர் கடுமையாக நெஞ்சில் தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த மெஹர்ஷாத் ஷாஹிதி உயிரிழந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெஹர்ஷாத் ஷாஹிதி மரணம் குறித்து அமெரிக்கா – ஈரான் எழுத்தாளர் நினா அன்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில், “திறமைவாய்ந்த இளம் சமையல் கலை நிபுணர், ஈரான் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டிருக்கிறார். ஷாஹிதி கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். நாங்கள் இதனை மறக்க மாட்டோம். மன்னிக்க மாட்டோம்” என்றார்.
மெஹர்ஷாத் ஷாஹிதி உறவினர் கூறும்போது, “மெஹர்ஷாத் ஷாஹிதி 19 வயது இளைஞர். ஈரானில் கொல்லப்பட்டிருக்கிறார். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வேளையில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். வண்டியிலிருந்து கீழே இறக்கப்பட்டு அவர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். பின்னர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.