மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து போராட்டம்!

156 0

மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை காலை 10.45

மணி அளவில் மன்னாரில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (O.M.P) முன் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

-வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்,மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் தலைவர் ஏ.திலீபன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். -போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மன்னாரில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது நீதி இல்லாத நாட்டில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் எதற்கு?, ஓ.எம்.பி.அலுவலகமே மன்னாரை விட்டு வெளியேறு,சர்வதேச விசாரணையே தமக்கு வேண்டும்,இரண்டு இலட்சமும் வேண்டாம்,மரண சான்றிதலும் வேண்டாம் என கோஷம் எழுப்பினர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக 2 லட்சம் ரூபாய் பணத்தை அரசு வழங்குவதாக தெரிவித்த கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும்,தமது பிள்ளைகளையும்,உறவுகளையும் மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நாங்கள் எமது வீடு நிலங்களை விற்று 4 லட்சம் இல்லை 10 லட்சமாவது தருகின்றோம் எனக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.

-மேலும் மன்னாரில் உள்ள ஓ.எம்.பி அலுவலகத்தினால் எவ்வித பலனும் இல்லை எனவும் குறித்த அலுவலகம் மன்னாரில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.