மனச்சாட்சியற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட இலங்கையை முன்னேற்றுவது இலகுவான விடயமல்ல

125 0

யாருக்கும் பொறுப்பு கூறுவதற்கு அவசியமற்ற நிர்வாக பொறிமுறையை நாட்டில் ஏற்படுத்தி , சட்டத்தை தமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளே தற்போது காணப்படுகின்றனர்.

இவ்வாறான மனசாட்சியற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட முன்னேற்றுவது இலகுவான விடயமல்ல என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக் கொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான காப்புறுதி தொகையை 10 இலட்சம் வரை அதிகரித்துக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா – இந்திகொல்ல புனித ஜூட் திருத்தலத்தின் வருடாந்த சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றது.

இதன் போதே பேராயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

யாருக்கும் பொறுப்பு கூறாத , பொறுப்பு கூற அவசியமற்ற நிர்வாக முறைமையை நாட்டில் ஏற்படுத்தி , நாட்டின் சட்டத்தை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு பொறுப்பற்ற மோசமான தீர்மானங்களை எடுத்து நாட்டை கையேந்தி உண்ணும் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி தொகை 2 இலடசத்திலிருந்து 10 இலட்சம் வரை அதிகரித்துள்ளது.

நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் , மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் இவ்வாறே அமைந்துள்ளன.

நாட்டில் மனசாட்சியுள்ள மக்கள் பிரதிநிதிகள் எங்கே? அரசியல் தலைவர்கள் எங்கே? இவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமா? சட்டத்தை சிறிதளவேனும் கவனத்தில் கொள்ளாமல் , அநீதியான முறையில் ஆட்சி செய்வதற்காக அரசியல் அதிகாரத்தை பாவிக்கும் அரசியல்வாதிகள் கொண்ட நாட்டை எவ்வாறு முன்னேற்ற முடியும்?

உலகிலுள்ள அபிவிருத்தியடைந்த நாடுகளில் மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பில் எவரேனுமொரு அரசியல்வாதியின் பெயர் வெளியிடப்பட்டால் , குறித்த நபர் உடனடியாக பதவி விலகிவிடுவார். ஆனால் எம் நாட்டிலுள்ளவர்கள் பதவி விலகுவதற்கு பதிலாக , அவர்களது பலத்தை மேலும் அதிகரித்துக் கொள்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றனர். அவரவருக்கு தேவையான வகையில் சட்டத்தை வலைத்துக் கொள்கின்றனர். தமக்கு ஏற்றாட்போல் அந்த சட்டங்களை பாவித்து நாட்டுக்குள் பாரதூரமான நிலைமையை ஏற்படுத்துகின்றனர்.

இது போன்ற மோசடிகள் நிறுத்தப்பட வேண்டும். மனசாட்சி கொண்ட தலைமைத்துவமொன்று நாட்டுக்கு அவசியமாகும். ஆனால் நாடு தற்போது செல்லும் முறைமையில் அவ்வாறானதொரு தலைமைத்துவம் இருப்பதாக உணர முடியவில்லை என்றார்.