உள்ளூராட்சி நிறுவனங்களின் சட்டங்களுக்கமைய அவற்றின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
வாதுவை புதிய சந்தைத் தொகுதியை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அரசாங்கம் எப்போதும் வர்த்தக சமூகத்தினருக்கு சக்தியை அளிக்கும் விதத்தில் செயற்படுவதற்கான தீர்மானங்களை எடுப்பதுடன், பொதுமக்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் முதலாவது நிறுவனமாக, உள்ளூராட்சி நிறுவனங்கள் செயற்படுகிறது. பொதுமக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவைகளை வழங்கும் பொருட்டு களுத்துறை பிதேச சபையை, நகர சபையாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அரசாங்கம் என்ற ரீதியில் நிதிப்பிரச்சனைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தாலும், கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் பரவியமையானது, இந்நெருக்கடி மேலும் தீவிரமடைவதற்குக் காரணமாகியது.
அதனால் பொதுமக்களது சுகாதாரத்திற்காக அதிகளவான பணத்தை அரசாங்கம் செலவு செய்யவேண்டியேற்பட்டது. தற்போதைய நிலைமைகளை சமாளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.