ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டாம்

102 0

வீழ்ச்சியடைந்துருந்த நாட்டின் பொருளாதாரம் தலைதூக்கி வரும் நிலையில் அதனை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்து அரச அராஜக நிலையை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகி வருகின்றன.

அத்துடன் நாட்டுக்கு அதிக வருமானம் கிடைக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை எதிர்வரும் 3ஆம் திகதியே ஆரம்பிக்கின்றது. ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு அதனை தடுக்க வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கட்சியின் கரன்தெனிய தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி நுவன் சொமிரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலா துறை தற்போது முன்னேற்றமடைந்து வருகின்றது. இதன் காரணமாக சுற்றுலாத்துறை நம்பி வாழ்ந்து வரும் பல தொழிலாளர்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகளில் இருந்து மீள ஆரம்பித்துள்ளனர்.

அதேபோன்று வீழ்ச்சியடைந்திருந்த ஏனைய துறைகளும் படிப்படியாக தலைதுக்க ஆரம்பித்திருக்கின்றன.

மேலும் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை எதிர்வரும் 3ஆம் திகதியே ஆரம்பிக்கின்றது. இதன் மூலம் பாரியளவில் டொலர்களை நாட்டுக்கு எதிர்பார்க்கின்றோம்.

எதிர்பார்க்கப்படும் டொலர்கள் கிடைக்கப்பெற்றால் மக்கள் எதிர்கொண்டுவரும் பொருளாதார கஷ்டங்களுக்கு ஓரளவு தீர்வு காணமுடியுமாகும் என்றே அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாளை 2ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தயாராகி வருகின்றது. 2ஆம் திகதி இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை தடைப்படலாம்.

இதனை கருத்திற்கொண்டுதான் இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

ஏனெனில் கடந்த மே 9ஆம் திகதி அதேபோன்று ஜூன் 9ஆம் திகதி மக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டடம் செய்வதற்கு காரணம் இருந்தது.

மக்கள் வாழமுடியாத அளவுக்கு நாடு முற்றாக செயலிழந்திருந்தது. இந்நிலையிலேயே மக்கள் வீதிக்கிறங்கினர். அதில் நியாயம் இருந்தது.

ஆனால் மக்கள் அன்று எதிர்கொண்டுவந்த பிரச்சினைகள் முற்றாக தீராவிட்டாலும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார். அதனை மக்கள் கண்கூடாக கண்டு வருகின்றனர்.

அத்துடன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான நோக்கம் என்ன? நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு கொண்டுசெல்வதே இவர்களின் திட்டம்.  அதனால் மக்கள் இதற்கு துணைபோகக்கூடாது.

அத்துடன் சுற்றுலாத் துறை தலைதூக்கி வரும் நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்தி மீண்டும் அதனை செயலிழக்கச் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.