கெப்பித்திகொல்லாவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான 54 வயதான பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (31) இரவு இடம்பெற்ற அமைதியின்மையின்போதான தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வாரியப்பொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அனுராதபுரம் – கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்றை நேற்றிரவு மேற்கொண்டனர். இதன் பின்னர் குறித்த போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து பதற்ற நிலை நிலவியது.
இந்நிலையில், குறித்த போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர்.
இதையடுத்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இதன் போது காயமடைந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.