கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக சட்டத்தரணி சிராஸ் தெரிவு

127 0

சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், கொழும்பு மாவட்ட  பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசலில், நேற்று (30) அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின்  கொழும்பு நகரக் கிளையின் நேரடி மேற்பார்வையில் நடந்த நிர்வாக தெரிவின் போது இவ்வாறு அவர் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், 2014 இல் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தை ஆரம்பிக்கும் போது அதன்   ஸ்தாபக உறுப்பினராகவும், செயலாளராகவும் ஏற்கனவே பதவி வகித்துள்ள நிலையிலேயே தற்போது புதிய தலைவராக  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், கொழும்பு நகரை மையப்படுத்தி அமையப் பெற்றுள்ள  180 பள்ளிவாசல்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.  அந்த சம்மேளனத்தின் கீழ் 12 கிளைகளும் இயங்குகின்றன.

இந் நிலையில் குறித்த சம்மேளனத்தின் செயலராக  புதுக் கடை கிளை சம்மேளனத்தை சேர்ந்த அப்துல் கரீமும்,  பொருளாலராக கொலன்னாவ கிளையைச் சேர்ந்த பெரோஸ் மொஹம்மட்டும்  தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.