வட மாகாணம் தமிழர்களின் பூர்வீகமான வாழ்விடமாகும்: ஜி.ஸ்ரீநேசன்

137 0

வடமாகாணமானது தமிழர்களைச் செறிவாகக் கொண்ட தமிழர்களின் பூர்வீகமான வாழ்விடமாகும். இதனால் தமிழர்களின் பண்பாடுகள் பழக்கவழக்கங்கள் மிகவும் கவனமாகப் பேணப்படும் மாகாணமாக வட மாகாணம் காணப்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று (30) விடுத்துள்ள அறிக்கைலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,

1) இராணுவக் கட்டுப்பாடு இல்லாத நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம்

2) விடுதலைப் புலிகளின் காட்டுப்பாடு அற்று, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த காலம் என இரு வகையாகப் பிரித்து ஆராய முடியும்.

இவ்விரு காலங்களிலும் சட்டபூர்வமான மதுசாரம், சட்பூர்வமற்ற போதைப்பொருள் விற்பனை விநியோகம், வாள் வெட்டுக்கள், பண்பாட்டுத் துஷ்பிரயோகங்கள், தற்கொலைகள், களவு கொள்ளைகள் எப்படிக்காணப்பட்டன என்பதை ஆராய வேண்டியுள்ளது.

அந்தவகையில் வடமாகாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மதுபான உற்பத்தி நிலையங்களோ விற்பனை நிலையங்களோ இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை.

அதே வேளை சட்டவிரோதமாக கசிப்பு, கஞ்சா, ஐஸ் போதைப்பொருட்கள், ஹெறோயின் விற்பனை செய்யப்படுவதற்கு சிறிதளவும் அவர்கள் இடமளிக்கவில்லை.

அப்படியான சட்ட விரோதமான செயற்பாடுகள் நடைபெற்றால் கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்ற அச்சம் சமூகத்தில் காணப்பட்டது.

மேலும் ஆவாக்குழுக்களோ வாள்வெட்டுச் சம்பவங்களோ நடைபெறவில்லை. பாலியல் லீலைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெற்றதாகத் தகவல்கள் இல்லை. களவுகள் நடைபெறவில்லை, தற்கொலைகள் கூட தற்போது நடைபெறுவது போல் இருக்கவில்லை.

மொத்தத்தில் தமிழர் கலாசாரங்களை நாசமாக்கக் கூடிய செயற்பாடுகள் நடைபெறவில்லை.

அர்த்த ராத்திரியில் இளம் பெண்கள் தனிமையாகப் பயணிக்கக்கூடிய நம்பிக்கையான சூழல் காணப்பட்டது என்று கம்பபாரதி ஜெயராஜ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் விடுதலைப்புலிகள் சட்ட விரோதமான செயற்பாட்டாளர்கள், ஆபத்தான பயங்கரவாதிகள் என்றெல்லாம் அரச தரப்பில் கூறப்பட்டது.

கோட்டாபயவின் போர் என்ற புத்தகத்தை எழுதிய அன்றைய முக்கியமான இராணுவ அதிகாரியும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும் குறிப்பிட்ட விடயம் நோக்கத்தக்கது.

அதாவது தாங்கள் யுத்தத்தின்போது விடுதலைப்புலிகளின் பல முகாம்களைக் கைப்பற்றி அங்கே அவதானித்த போது அங்கு மதுப்போத்தல்களோ, மதுக்குவளைகளோ இருக்கவில்லை என்றும், மேலும் அவர்களது முகாம்களில் களியாட்டம் சம்பந்தமான நிழல்பட ஆவணங்களோ இருக்கவில்லை.

அந்த வகையில் விடுதலைப் புலிகள் ஒழுக்கமானவர்கள் என்று அந்த இராணுவ அதிகாரி நற்சான்றிதழ் வழங்குவது போல் பேசியிருந்தார். அதேவேளை காலம் சென்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் பிரமுகருமான ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை முக்கியமான விடயம் ஒன்றினைக் கூறி இருந்தார்.

அதாவது ஊழல் மோசடி கையூட்டு இல்லாமல் பொலிஸ் துறையினர் பணியாற்றுவதாக இருந்தால், அதனை விடுதலைப் புலிகளின் காவல்துறையினரிடம் சென்று கற்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

சிங்கள அமைச்சர்கள் இராணுவ அதிகாரிகள் கூட சில உண்மைகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை இவற்றில் இருந்து அறிய முடிகின்றது.

மேலும் விடுதலைப்புலி உறுப்பினர் யாருமோ எந்தப் பெண்ணையாவது பாலியல் பலாத்காரம் செய்ததாக எந்தச்செய்தியும் இல்லை. அவை அப்பயிருக்க இறுதியுத்த முடிவின் பின்னர், இராணுவக் கட்டுபாட்டுக்குள் வட மாகாணம் வந்ததன் பின்னர், அரசின் சிவில் செயற்பாடுகள் முழுமையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகின்றன.

வடக்கில் வசந்தம், கிழக்கில் உதயம் என்றெல்லாம் சிலாகித்துப் பேசப்பட்டன. தற்போது வடக்கில் என்ன நடக்கின்றன.கேரளாக் கஞ்சா கடத்தல், ஐஸ் போதைப்பொருள் விற்பனை, ஹெறோயின் விற்பனை நடைபெறுகின்றன.

பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மதுபானக் கடைகள் வடக்கு கிழக்கில் மிகையாகத் திறக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் போதைக்கு அடிமைகளாக மாறி வருகின்றனர். யாழ். கோட்டையினை அண்டிய பகுதி காதல் போதையர்களினதும், பாலியல் சில்மிசங்களினதும் கேந்திர நிலையமாக மாறி வருகின்றது.

சில விடுதிகளில் தவறான செயற்பாடுகள் நடப்பதாகக் கண்டறியப்பட்டு கைதுகள் நடைபெற்றுள்ளன.

கோப்பாயில் 13 வயதுப் சிறுமியை 73 வயதான பாட்டனுக்குச் சமமான காமுகன் பாலியன் வேட்டையாடியதாகக் கைது செயப்பட்டுள்ளான். ஆவாக குழுக்கள் தாராளமாக வாள்வெட்டுக்களை நடத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

திருட்டும் கொலைகளும் இரட்டை நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. கிருசாந்தி, சாராதம்பாள், வித்தியா, கோணேஸ்வரி போன்ற தமிழ்ப்பெண்கள் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதெல்லாம் இராணுவக்கட்டுப்பட்டு பிரதேசங்களாகவே காணப்பட்டமை குறிப்படத்தக்கதாகும்.

சிலர் வைத்தியர்கள் என்ற பெயரில் மருந்தகங்களில் போதை தொடர்பான ஆபத்தான மாத்திரைக்களப் பெருமளவு கொள்வனவு செய்துள்ளனர். இப்படியாக வட மாகாணத்திலுள்ள தமிழர்களின் கட்டுக்கோப்பான கலாசாரத்தினை நாசமாக்குவதற்கான நாசகாரச் செயல்கள் நடைபெறுகின்றன.

பொலில் கட்டுப்பாடு, இராணுவக்கட்டுப்பாடு, அரசின் சிவில் செயற்பாடுகள் நூறு சதவீதம் வட மாகாணத்தில் உள்ள போது தமிழ் சமூகத்தையும் அவர்களது கலாசாரத்தினையும் அழிக்கும் செயற்பாடுகள் எழுந்தமானமாக நடைபெறுவதாகக் கூற முடியாது.

திட்டமிட்ட அடிப்படையில் மறை சக்திகளால் இச்செயற்பாடுகள் நடைபெறுவதாகவே நம்பப்படுகிறது.

இன அழிப்பு, கலாசார அழிப்பு, நினைவுச் சின்னங்களின் அழிப்பு, உணர்வழிப்பு, தமிழர்களை அடக்குதல், ஒடுக்குதல், அகற்றுதல், அழித்தல் என்பவற்றின் அடிப்படைவாதத்தின் நீண்ட காலத்திட்டமிடலோ என்று ஐயங்கொள்ள வேண்டிய நிலைமை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சட்ட விரோதிகள், பயங்கரவாதிகள் என்று அரசினால் கூறப்பட்டவர்கள் காலத்தில் இல்லாத நாசகாரச் செயல்கள் சட்டரீதியானவர்களின் பரிபாலனத்தின் கீழ் நடைபெறுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.

இந்த இடத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மதத்தலைவர்கள்,சிவில் செயற் செயற்பாட்டாளர்கள்,மனிதவுரிமை ஆர்வலர்கள், புத்தியாளர்கள், கல்விமான்கள் தத்தமது சமூகங்களைப் பாதுகாப்பதற்குத் தொண்டர்களாக சேவையாற்ற வேண்டியுள்ளது.

இது காலத்தின் கட்டளையாகவும் கடமையாகவும் உள்ளது.அதிகாரர்களோடு ஒட்டி சலுகைப்பரிகாரம் தேடும் அரசியல்வாதிகள், அதிகாரிகளும் வடக்கு கிழக்கில் நடைபெறும் நாசகார செயல்களுக்குப் பொறுப்புக் கூறியாக வேண்டும்.

கையுயர்த்தி தலையசைத்தால் காலமெல்லாம் பிழைக்கலாம் என்ற சுயநலசிந்தனை தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தாகிவிடும்.கையுயரப் பை நிறையும்,பை நிறையப் பணவான்கள் ஆகலாம் என்பது மக்களை விற்றுப்பிழைக்கும் வடிகட்டிய சுயநல அரசியலாகும்.இங்கு விற்பனையாவது பண்டங்கள் சரக்குகள் மட்டுமல்ல பணத்திற்காய் அரசியல் வியாபாரம் செய்யும் பம்மாத்து அரசியல்வாதிகளுந்தான்” என தெரிவித்துள்ளார்.