மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாச குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதேபோல மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடைமையாளர்கள் ஆக்கப்படுவார்கள். அதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரமும் மேம்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ‘பிரபஞ்சம்’ எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு நேற்று சனிக்கிழமை (ஒக் 29) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கிவைத்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கும் திட்டம் தொடர்பில் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். சாத்தியமில்லை எனவும் கதை கட்டினர். அது தவறு.
எமது ஆட்சியில் நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்கள் உருவாக்கப்படுவார்கள். ஏற்றுமதித்துறையில் புரட்சி இடம்பெறும். தேயிலை பயிரிடக்கூடிய இடங்களை தரிசு நிலங்களாக வைப்பதில் பயன் கிட்டாது.
பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்கள் ஆக்குவேன் என நான் கூறியபோது, எனக்கு எதிராக மொட்டு கட்சியினர் சேறு பூசினர். ஏளனம் செய்தனர். இவர்கள் தான் உரத்துக்கு தடை விதித்து, பெருந்தோட்டத்துறைக்கு பெரும் தீங்கு விளைவித்தனர்.
பெருந்தோட்ட மக்களை இருளுக்குள் தள்ளிய இவர்கள் தான், இனவாதத்தை கையில் எடுத்தனர். பெருந்தோட்ட மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களையுமே இவர்கள் குழிக்குள் தள்ளினர்.
இவ்வாறு நாட்டு மக்களை துன்பத்துக்குள் தள்ளிவிட்டு, சாம்பல் மேட்டினில் இருந்து மீண்டெழுவோம் என தற்போது சூளுரைத்து வருகின்றனர்.
நாட்டை சாம்பலாக்கிவிட்டே அவர்கள் மீண்டெழ பார்க்கின்றனர். அவர்களின் மீள் எழுச்சி மக்களின் கைகளில் தான் உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.
நாட்டு வளங்களை சூறையாடிய நாட்டை வங்குரோத்து அடையச்செய்து, தமது குடும்பத்தை செல்வந்தர்கள் ஆக்கியவர்களுக்கு மீண்டெழும் வாய்ப்பை மக்கள் வழங்குவார்களா?
நாட்டில் தற்போதுள்ள அரசாங்கமும் வங்குரோத்து அரசாங்கம்தான். அதனால்தான் மக்கள் மீது வரிச்சுமை திணிக்கப்படுகின்றது.
எமது நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எமது ஆட்சியில் மீளப்பெறப்படும். களவாடப்பட்ட சொத்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்படும். இதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.