ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கு முன்னர் 19ஆம் திகதி இரவு 11:30 சம்பந்தன் கூறிய விடயம் மிகவும் முக்கியமானது
2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களினால் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன
சந்திரிகாவின் காலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 8 மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன. நான் ஒன்றைக் கூட பெறவில்லை. பாராளுமன்றத்தில் அதனை பெறாத ஒரே எம்.பி. நான் தான்.
கோட்டாபய ஒரு சிறந்த மனிதர். அதனை நான் இப்போதும் கூறுகிறேன். ஆனால் அவரது கொள்ளளவு, அரசியல் அனுபவமற்ற தன்மை, இராணுவ கட்டமைப்பிலிருந்து சகல விடயங்களை பார்த்தமை, குடும்ப அரசியலுக்கு தேவைக்கு அதிகமாக அடிபணிந்தமை போன்றவற்றால் நாம் எதிர்பார்த்த கோட்டாவை காணமுடியவில்லை என்று சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தாலும் ஒரு சில விடயங்களில் வெற்றிபெற்றதாக தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
டலஸ் அழகப்பெரும மஹிந்த தரப்பிலிருந்து விலகியமை மிக முக்கியமான விடயமாக அப்போது பார்க்கப்பட்டது. மிக நீண்டகாலமாக அந்த முகாமுக்குள் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் எனினும் தான் பொறுமையாக இருந்து வந்ததாகவும் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கிறார்.
மார்ச் 30ஆம் திகதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது மறுதினம் டலஸ் அழகப்பெரும அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
தற்போது பலர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் எதிர்காலத்தில் கூட்டாக செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் டலஸ் அழகப்பெரும கூறுகிறார்.
சில தினங்களுக்கு முன்னர் அழகப்பெரும தலைமையில் எதிர்கட்சிகள் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தாமதத்துக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
இந்நிலையில் டலஸ் அழகப்பெருமவுடனான செவ்வியின் விபரம் வருமாறு
கேள்வி மஹிந்த ராஜபக்ஷவின் பலமான கோட்டையில் இருந்து நீங்கள் வெளியே வருவதற்கு தாக்கம் செலுத்திய முக்கிய காரணங்கள் என்ன ?
பதில் இது உடனடியாக எடுக்கப்பட்ட முடிவல்ல. பல மாதங்களாக நாங்கள் ஆராய்ந்து மதிப்பீடுகள் செய்து எடுக்கப்பட்ட தீர்மானம். உள்ளக ரீதியில் பல நெருக்கடிகளுக்கு நாங்கள் கட்சிக்குள்ளே முகம் கொடுத்தோம். பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இருந்தோம்.
பிரச்சினை பெரிய பூதாகரமாக வெடித்தபோது நாங்கள் வெளியே வந்தோம். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கு முன்னதாகவே நான் அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட்டேன். 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நான் மூன்று அமைச்சுகளுக்கு மாற்றப்பட்டேன்.
இது உலக சாதனையாக இருந்திருக்கும். இதனூடாக உள்ளக ரீதியில் எந்தளவு தூரம் நாங்கள் நெருக்கடியில் இருந்திருக்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
கேள்வி பொதுஜன பெரமுனவுக்குள் உங்களுக்கு எதிராக செயல்பட்டது யார்?
பதில் பொதுஜன பெருமுன என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு நபரை சுற்றி உருவாக்கப்பட்ட ஒரு குழு. அரசியல் கட்சிக்கு இருக்கின்ற பண்புகள் அதில் இல்லை. இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகமான அரசியல் கட்சிகள், கட்சிகள் அல்ல. தற்போது நீங்கள் பொதுஜன பெரமுனவின் தலைவர் யார் என்று கேட்டால் தெரியாது. 76 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் இருக்கின்றன. அதில் அதிகமான கட்சிகளுக்கு இந்த நிலைமை தான்.
கேள்வி நீங்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வெளியே வந்ததாக கூறுகிறீர்கள். ஆனால் பிரதமராக வேண்டும், ஜனாதிபதியாக வேண்டும் என்ற ஆசையில் நீங்கள் வெளிவந்ததாக கூறப்படுகிறதே?
பதில் அப்படி என்றால் அரசாங்கத்தில் இருந்திருப்பேன் அல்லவா? நான் அரசாங்கத்தில் இருக்கும்போது தான் எனது பெயர் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டது. நான் கிராமத்தில் இருந்து அரசியலுக்கு வந்த ஒருவன். குடும்ப பின்னணி பணம் என்பன என்னிடம் இருக்கவில்லை. நேர்மை மற்றும் திறமை காரணமாக நாங்கள் அரசியலுக்கு வந்தோம். ஜனாதிபதியாகுவதோ பிரதமராகுவதோ எனது கனவு அல்ல. மேலும் எந்த பதவியையும் விடவும் கல்வி அமைச்சர் பதவியே எனக்கு சிறந்த பதவி என்று கருதுகிறேன்.
பதவி ஆசையில் தீர்மானம் எடுக்கவில்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறேன். எனக்கான ஏழு வாகன அனுமதி பத்திரங்களில் நான் ஆறு பத்திரங்களை பெற்றுக் கொள்ளவில்லை. சந்திரிகாவின் காலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 8 மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன. நான் ஒன்றைக் கூட பெறவில்லை. பாராளுமன்றத்தில் அதனை பெறாத ஒரே எம்.பி. நான் தான்.
எனது மனைவி இலங்கையின் சிறந்த பாடகி மற்றும் நடிகை ஆவார். ஆனால் அவரை நான் ஒரு ஆரம்பப்பள்ளி வைபவத்துக்கு கூட அழைத்துச் சென்றதில்லை.
கேள்வி நாங்கள் பார்த்த வகையில் நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டீர்கள். மஹிந்த ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரிய ஒரு எம்.பி. ஆகவே நீங்கள் அரசாங்கத்தில் இருந்தீர்கள். இந்த நட்புக்கு என்ன நடந்தது?
பதில் அந்தக் கேள்விக்கு நீங்கள் மஹிந்த ராஜபக்சவிடம் தான் பதிலை எதிர்பார்க்க வேண்டும். அவர் அதற்கு பதில் அளிப்பதே சரியாக இருக்கும். நான் அளிக்கின்ற பதில் செல்லுபடியாக அமையாது என்று கருதுகிறேன்.
கேள்வி 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் உங்களுக்கு பிரச்சனைகள் நெருக்கடிகள் ஏற்பட்டதாக கூறுகிறீர்கள். உண்மையில் 2010 க்கு பின்னர் என்ன நடந்தது?
பதில் 2010 க்கு பின்னர் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் அரசாங்கத்தில் கட்சிக்குள் தமது அதிகாரத்தை எடுத்துக்கொண்டார்கள். 2005 ல் இருந்து 2010 வரை மஹிந்தவுக்கு நல்ல ஒரு பயணம் அமைந்தது. 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் பயணம் வித்தியாசமாக மாறியது. மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களினால் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. எனவே சம்பிரதாயபூர்வமாக மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயல்பட்ட நான் உட்பட பலர் அந்த வட்டத்தில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். இங்குதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின. உதாரணமாக 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் நான் இரண்டு வருடங்களில் மூன்று அமைச்சுகளுக்கு மாற்றப்பட்டு இருக்கின்றேன் அல்வவா?
கேள்வி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போது இந்த நிலைக்கு எங்கு தவறு இழைக்கப்பட்டது?
பதில் குடும்ப ஆட்சியை முன்கொண்டு செல்ல எடுத்த நகர்வுகள் அவரது பின்னடைவுக்கு காரணமாக அமைந்தன. ராஜபக்ஷமாருக்கு மட்டும் இது நடந்ததில்லை. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 74 வருடங்களில் 10 வருடங்களே குடும்பங்களை தவிர்த்து வேறு உறுப்பினர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்தனர். அதனை தவிர்த்து பார்த்தால் டி எஸ் சேனாநாயக்க, பண்டாரநாயக்க, ஜெயவர்த்தன மற்றும் ராஜபக்ஷ குடும்பங்களே இந்த நாட்டை ஆண்டிருக்கின்றன. இடை நடுவில் தகநாயக்க, பிரேமதாச, டி.பி. விஜயதுங்க, மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வெறுமனே 10 வருடங்களே இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கின்றனர். இன்று ஜெயவர்த்தன – ராஜபக்ஷ ஆட்சி நாட்டில் நடக்கிறது. இந்த குடும்ப அரசியலை மிக தீவிரமான முறையில் முன்னெடுத்தமையே மஹிந்த ராஜபக்ஷவின் பின்னடைவுக்கு காரணம்.
கேள்வி மஹிந்தவின் கோட்டை சரியும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா ?
பதில் இது முன்னரே எங்களுக்கு தெரிந்திருந்தது. அரசியல் என்பது ஊடகத்தைப் போன்றோ , ஏனைய தொழில்களை போன்றதோ அல்ல. அரசியலில் நீங்கள் எதிர்பார்ப்பது போன்று விரைவாக தீர்மானம் எடுக்க முடியாது. தாம் விரும்பாத தமக்கு பிடிக்காத தரப்பினருடன் ஒரு சிறிய காலத்துக்காவது இருக்க வேண்டி ஏற்படும். அதுதான் எனக்கு அதுதான் நடந்தது. எனக்கு மட்டுமல்ல பலருக்கு அது நடந்திருக்கிறது.
கேள்வி ஆனால் நீங்கள் பிரச்சினை இருக்கின்றது என்று தெரிந்தும் பல வருடங்கள் அதே முகாமில் இருந்திருக்கின்றீர்கள்?
பதில் நான் அதே முகாமில் இருந்திருந்தாலும் அந்த முகாமில் இருந்தவர்களுக்கு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஏதாவது ஒன்று எனக்கு முன்வைக்கப்பட்டதா? ரோசாப்பூவில் இருக்கின்ற முற்களை பார்க்கும் நீங்கள் அதில் இருக்கின்ற மலரையும் பார்க்க வேண்டும். நான் நேர்மையாக செயல்பட்டேன். இந்த நாட்டில் அரசியலுக்கு வந்த முதல் முதல் டலஸும் இறுதி டலஸும் நான்தான்.
கேள்வி 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உங்கள் முகாமுக்கு கிடைத்த வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் கோட்டாவை மக்கள் மிக நேர்மையாக நம்பினார்கள். நாங்களும் நம்பினோம். நாம் கடந்த 20 வருடங்களாக எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ ஒரு பதிலாக இருப்பார் என்று எதிர்பார்த்தோம். குடும்ப அரசியலில் இருந்து வெளியே வர முயற்சித்தவர். சால்வையை போடாதவர். ஒழுக்கத்துடன் ஒரு முறையை உருவாக்குவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். 69 லட்சம் மக்கள் அதனை எதிர்பார்த்தனர்.
கேள்வி ஆனால் 2019 ஆம் ஆண்டில் இனவாதத்தை முன்வைத்து வெற்றி பெற்றதாக கூறப்படுகிறதே?
பதில் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் கடந்த பல தசாப்தங்களாக நடந்த சகல தேர்தல்களிலும் இனவாதம், மதவாதம், மொழி பிரச்சினை என பல விஷயங்களை கொண்டே இந்த நாட்டில் அரசியல் செய்யப்பட்டிருக்கின்றது. எமது அணியில் வாசுதேவ இருந்தார். அவர் ஒரு இனவாதியா? இல்லையே? இலங்கையில் இதுவரை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் 17 நடைபெற்றுள்ளன. இந்த 17 தேர்தல்களில் இரண்டு தேர்தலை தவிர சகலவற்றிலும் இவ்வாறு இனவாதம் மதவாதம் மொழிவாதம் என்பன இருந்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் யுத்தத்தை விற்றும் தேர்தல் செய்திருக்கின்றனர்.
கேள்வி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏன் தீர்மானித்தீர்கள்?
பதில் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே போட்டியிட தீர்மானித்தேன். அது மிகவும் நெருக்கடியான காலகட்டமாக இருந்ததால் ஒரு அரசியல் தலைவர் என்ற ரீதியில் சவாலை ஏற்று நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று கருதினேன்.
கேள்வி நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று யாராவது உங்களிடம் கோரிக்கை விடுத்தார்களா?
பதில் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் என்னிடம் கோரிக்கை விடுக்கவில்லை. ஆனால் பிரதமர் பதவிக்கு என்னுடைய பெயரை 11 கட்சிகளின் தலைவர்கள் தெரிவு செய்திருந்தார்கள். சகல எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்கினால் அதாவது ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சகல எதிர்க்கட்சிகளும் ஒரு அணியில் இருந்தால் நான் இந்த சவாலை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தேன்.
கேள்வி ஆனால் தோல்வியடைந்து விட்டீர்களே?
பதில் இலக்கங்களில் எனக்கு தோல்வி கிடைத்தது என்பது உண்மை. ஆனால் எனது அரசியல் வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் அடைவதற்கான ஒரு நிகழ்வும் அந்த ஜனாதிபதி வாக்கெடுப்பின் போது இருந்தது. ஜூலை இருபதாம் திகதி ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கு முன்னர் 19ஆம் திகதி இரவு 11:30 மணியளவில் நானும் பீரிஸும் டிலானும் சஜித் பிரேமதாசவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் அதன் தலைவர் சம்பந்தனின் இல்லத்துக்கு சென்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தார்கள்.
அப்போது சம்பந்தன் கூறிய விடயம் மிகவும் முக்கியமானது. இரண்டு விடயங்களுக்காக டலஸுக்கு வாக்களிப்பதாக சம்பந்தன் கூறினார். அதாவது டலஸ் இனவாதி அல்ல, இரண்டாவது டலஸ் ஊழல்வாதி அல்ல. இந்த இரண்டு விடயங்களுக்காக நாம் அவரை ஆதரிக்கின்றோம் என்று சம்பந்தன் கூறினார். அது எனது அரசியல் வரலாற்றில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு அங்கீகாரம்.
ஜனாதிபதி பதவியை விட சம்பந்தன் போன்ற ஒரு தலைவர் அவ்வாறு கூறியது எனக்கு மிக பெறுமதியானது. ஜனாதிபதி பதவியை பணத்துக்கு கூட எடுக்கலாம். அது நடந்திருக்கிறது. ஆனால் சம்பந்தன் கூறிய இந்த விடயத்தை பணத்தால் பெற முடியாது.
கேள்வி ஜனாதிபதி தேர்தலின் போது சஜித்துடன் எவ்வாறான விடயங்களுக்கு இணக்கப்பாடு எட்டபட்டது?
பதில் நாம் பொதுவான வேலை திட்டம் தொடர்பான ஒரு இணக்குப்பாட்டுக்கு வந்தோம். எட்டு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்காக அந்த வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டது. நான் ஜனாதிபதியாகியிருந்தால் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சரவையில் அங்கம் வகித்திருக்கும்.
கேள்வி சஜித் தோல்வடைதை தெரிந்து கொண்டு உங்களை அதில் சிக்க வைத்து விட்டார் என்றும் கூறப்பட்டதே?
பதில் அது தவறான கருத்து. அதனை முழுமையாக நிராகரிக்கிறேன்.
கேள்வி நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்த அந்த புகைப்படம் எவ்வாறு வெளியே வந்தது?
பதில் அது ரகசியமாக நடக்கவில்லையே. நாங்கள் அந்த சந்திப்பு நடந்த போது படம் எடுக்கப்பட்டது.
கேள்வி உங்களுடன் தற்போது இருக்கின்ற ஒரு சில உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் வியத்மக என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டவர்கள். ஆனால் அந்தத் திட்டங்கள் தோல்வியடைந்ததாகவே கடந்த காலங்களில் கூறப்பட்டது. எப்படி நீங்கள் அவ்வாறானவர்களுடன் இணைந்து செயல்படுகிறீர்கள்?
பதில் உங்கள் கேள்வி தவறானது. வியத்மக என்ற அமைப்பின் ஊடாக உருவாக்கப்பட்ட அந்த வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தவில்லை. வியத்மக பெயரில் புத்திஜீவிகளை கொண்டு வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் வியத்மக பிரதிநிதிகள் யார் அமைச்சரவையில் இருந்தார்கள்? வாக்குகளை பெறவே வியத்மக பயன்படுத்தப்பட்டது.
கேள்வி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது?
பதில் கோட்டாபய ஒரு சிறந்த மனிதர். அதனை நான் இப்போதும் கூறுகிறேன். ஆனால் அவரது கொள்ளளவு, அரசியல் அனுபவமற்ற தன்மை, இராணுவ கட்டமைப்பிலிருந்து சகல விடயங்களை பார்த்தமை, குடும்ப அரசியலுக்கு தேவைக்கு அதிகமாக அடிபணிந்தமை போன்றவற்றால் நாம் எதிர்பார்த்த கோட்டாவை காணமுடியவில்லை.
கேள்வி அப்படியானால் கீழ் மட்டத்திலிருந்து அரசியல் செய்து வந்த ஒருவர் தான் நாட்டின் தலைவராக வேண்டுமா?
பதில் அப்படி கூற முடியாது. திடீரென்று அரசியலுக்கு வந்து ஜனாதிபதியாக வந்தவர்கள் கூட உலகில் சிறந்த ஆட்சியை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் கோட்டாபயவின் குடும்ப உறவினர்கள் அநாவசியமான முறையில் அதிகாரத்தை கையில் எடுத்தனர். அதற்கு அவர் சுதந்திரமாக இடமளித்தார். நெகிழ்வு போக்குடன் செயல்படவில்லை. என்ன நினைத்தாரோ அதை செய்தார்.
கேள்வி இதற்கு உங்களுடன் சம்பந்தப்பட்ட வகையில் ஏதாவது உதாரணங்கள் இருக்கின்றனவா?
பதில் எரிவாயு மின்நிலைய செயல்பாடு தொடர்பான விடயம் வந்தது. இந்தியா ஜப்பான் மற்றும் இலங்கை இணைந்து இந்த இயற்கை எரிவாயு மின்திட்டத்தை செய்வதற்கான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அது நாங்கள் ஆட்சிக்கு வர முன்னரே எடுக்கப்பட்டிருந்த ஒரு விடயமாகும்.
இது குறித்து நான் ஜனாதிபதிடன் பேசியபோது ஜனாதிபதி இல்லை, மின்சக்தி விடயம் அரசாங்கத்திடமே இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதன்பின்னர் நான் இந்திய தூதுவருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினேன். அதாவது நாங்கள் கேள்வி மனுவுக்கு போகபோகின்றோம். மேலும் இது அரசாங்கத்திடம் இருப்பது நல்லது என்பதே ஜனாதிபதியின் கருத்தாக அமைந்திருக்கின்றது என்று நான் இந்திய தூதுவருக்கு கடிதம் எழுதினேன்.
அதன் பின்னர் கேள்விமனு செயற்பாட்டுக்கு நாங்கள் போனோம். கேள்விமனு வெளியிடப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின்னர் அதன் அந்த காலத்தை மேலும் நீடிக்குமாறு எனக்கு கோரிக்கை வந்தது. பின்னர் மூன்று மாதங்கள் வழங்கப்பட்டன. கேள்விமனு முடிக்கப்பட்டு அவற்றை மதிப்பீடு செய்து கொண்டிருந்தபோது ஒரு அமைச்சரவை பத்திரம் வந்தது. அதாவது நான் விடயதான அமைச்சராக இருக்கின்ற போது எனக்கு தெரியாமல் அமைச்சரவைக்கு ஒரு பத்திரம் வந்தது.
அதாவது அமெரிக்காவின் நியூ ஃபோட்ரஸ் என்ற நிறுவனத்துக்கு அதனை வழங்குமாறு அந்த அமைச்சரவை பத்திரம் வந்தது. கேள்விமனு இல்லாமல் அது வழங்கப்பட்டது அப்போது நாம் நினைத்த கோட்டாபய ராஜபக்ஷவா என்று எண்ணினேன். அந்த சம்பவம் நடந்த தினம் இரவே நான் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டும் என்று தீர்மானித்தேன்.
கேள்வி தற்போது ஜனாதிபதி ரணில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதாகவும் அதில் தமிழ் பேசும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதற்கு நீங்கள் ஆதரவு வழங்கவீர்களா?
பதில் புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம் என்பதை நாம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறோம். 1994 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் சகல தேர்தல்களிலும் இந்த புதிய அரசியலமைப்பு விடயம் பேசப்படுகிறது. கட்சிகளை காப்பாற்றவும் நபர்களை காப்பாற்றவும் எதிராளியை நிராகரிக்கவும் நோக்கமாகக் கொண்டே இலங்கையில் அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கேள்வி புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அதில் தேசிய பிரச்சினைக்கு தீர்வுக்கு ஆதரவு வழங்குவீர்களா?
பதில் அது இவ்வாறு பேசக்கூடிய விடயம் அல்ல. அது மிகவும் ஆழமாகவும் பரந்துபட்ட வகையிலும் பார்க்கப்பட வேண்டிய விடயம். தற்போதைய அரசியலமைப்பிலும் 13வது திருத்தமும் தேர்தல் முறைமையும் ஒன்றாக முடிச்சுபோடப்பட்டுள்ளது.
கேள்வி உங்கள் தரப்பு அடுத்த தேர்தலில் எவ்வாறு போட்டியிடும்?
பதில் நாங்கள் தற்போது அரசியல் முகாதம் ஒன்று உருவாக்கி ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை வெளியிட்டு இருக்கின்றோம். சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்துகிறோம். உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு எதிராக நாம் முன்நின்று சகல எதிர்கட்சிகளை இணைத்து செயல்பட்டு வருகிறோம். இதில் 23 கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. சகல தரப்புகனுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
கேள்வி சந்திரிகா குமாரதுங்கவுடன் தொடர்பு கொண்டுள்ளீர்களா?
பதில் இல்லை நான் அவருடன் இன்னும் எந்த தொடர்பையும் மேற்கொள்ளவில்லை.
கேள்வி எதிர்காலத்தில் அவருடன் இணைந்து செயல்படும் சாத்தியம் இருக்கிறதா?
பதில் என்னுடைய ஒரு கொள்கை என்னவென்றால் இந்த நாட்டில் நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர்கள் அதன் பின்னர் அரசியல் பதவிகளை எடுக்கக் கூடாது என்பதாகும்.
கேள்வி 2022 ஆம் ஆண்டு நீங்கள் செய்தது சரி என்றால் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால செய்ததும் சரிதானே?
பதில் அவை இரண்டும் இரண்டு அரசியல் சம்பவங்கள். அவற்றை ஒருபோதும் சமப்படுத்த முடியாது. தேர்தல் ஒன்றின்போது நாங்கள் வெளியேறவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் அரசாங்கம் இரண்டு வருடங்களை பூர்த்தி செய்த நிலைகளிலே இந்த முடிவை எடுத்தோம்.
கேள்வி நான் சில அரசியல்வாதிகளின் பெயர்களை கூறுகிறேன். உங்களுடைய மதிப்படை கூறுங்கள்.
சுமந்திரன்
திறமையான ஒரு அரசியல்வாதி
மனோ கணேசன்
அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்ற ஒரு சிறந்த அரசியல்வாதி
சஜித் பிரேமதாச
சமூகம் நினைப்பதை விட மிகவும் அறிவுபூர்வமாக செயல்படுகின்ற ஒரு தலைவர். ஒரு சிறந்த செவிமடுப்பாளர்.
மஹிந்த ராஜபக்ஷ
சிறந்த கௌரவமான ஒரு தலைவர். இந்த கௌரவத்தை குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு எதிர்காலத்துக்கு வழங்காமல் இருப்பதற்கு முயற்சிப்பதை பார்க்கிறோம்.
ஜனாதிபதி ரணில்
அவர் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சவாலை ஏற்றுக் கொண்டிருக்கின்றார். ஆனால் அவர் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடாமல் பிரச்சனைகளை சிறந்த முறையில் அனுபவிக்கின்றார் என்றே தெரிகிறது.
நேர்கண்டவர் – ரொபட் அன்டனி