உலக சிக்கன நாளையொட்டி அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை தொடங்குங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக சிக்கன நாள் இன்று (அக்.30) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது.
சிக்கனம் என்பது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமின்றி, ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் செயல். பணத்தை மட்டுமல்லாமல், பொருட்கள், இயற்கை வளங்களையும் பொறுப்புடன் செலவழிப்பதில் சிக்கனம் தொடங்குகிறது. ‘பணத்தை தண்ணீராய் செலவழித்தல்’ என்ற உவமையில் இருந்து மாறுபட்டு, ‘தண்ணீரை பணம்போல செலவழிக்கும்’ கட்டாயத்தை உலகமே இன்று உணர்ந்திருக்கிறது. ‘குறைந்தபட்ச தேவைகளுடனான வாழ்க்கை’ என்கிற கருத்தியல் விரைவாக பரவி வருகிறது. ஒரு பொருளை, ‘தேவையா?’என்று பலமுறை சிந்தித்து வாங்குவதில் சிக்கனம் தொடங்குகிறது.
மூன்றில் ஒரு பங்கு சேமிப்பு
விழிப்புணர்வுடன் வாழ்க்கையை அணுகுபவர்கள் குறைந்தபட்ச தேவைகளை மட்டும் கருத்தில் கொண்டு செலவு செய்கின்றனர். வருமானத்தில் பெரும்பகுதியை சேமித்து வைக்கின்றனர். வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை சேமிப்புக்கும், பத்தில் ஒரு பங்கை கேளிக்கை, பொழுதுபோக்குக்காகவும் செலவழிப்பவர்களே வளமான வாழ்க்கையை வாழ முடியும். சேமிப்பே ஒருவரது வாழ்க்கையை நம்பிக்கைக்கு உரியதாக மாற்றுகிறது. சேமிப்பதுடன், அதைசரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம்.
உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதிசெய்யும் நோக்கில், இல்லத்துக்கு ஓர் அஞ்சலக தொடர் சேமிப்பு கணக்கை, அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற்று, வளமடைந்து, வாழ்வாங்கு வாழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் வேண்டுகோள்
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் 1985-ம் ஆண்டு முதல் அக்.30-ம் தேதி உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’ என்பது திருக்குறள். ஒருவன் தனது செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாவிட்டால், செல்வம் இருப்பதுபோல தோன்றினாலும் செல்வத்தை இழந்து அவனது வாழ்க்கை கெடும் என்று கூறியுள்ள திருவள்ளுவர், மனித வாழ்க்கையில் சேமிப்பின் முக்கியத்துவத்தை ஈரடிகளில் சிறப்பாக விளக்கியுள்ளார்.
சிறுகச் சிறுக சேமிப்பதன் மூலம் குடும்பத்தின் அவசர தேவைகளை, எளிதில் எதிர்கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடுகட்டுதல் போன்ற செலவினங்களைகடன் வாங்காமல் மேற்கொள்ளலாம். ஒவ்வொருவரும் தனது வருவாயில், ஒரு பகுதியை பாதுகாப்பான வழியில் சேமிப்பதுதான் சிறந்தது.
மக்கள் தங்களது சேமிப்பு தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், தேவைப்படும் நேரத்தில் அதை திரும்ப பெற முடியும். அந்த வகையில், அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானவை. எனவே, மக்கள் அனைவரும் சிக்கனத்தை கடைபிடித்து, சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து உயர்ந்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
சேமிப்பே ஒருவரது வாழ்க்கையை நம்பிக்கைக்கு உரியதாக மாற்றுகிறது.