தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும்

127 0

அரியலூர் மாவட்டத்தில் சோழர்கால பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 2 நாள் நடைபயணத்தை கீழப்பழுவூரில் நேற்று பாமக தலைவர் அன்புமணி தொடங்கினார். அவர் பேசியது:

தமிழகம் முழுவதும் நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடியை அரசு ஒதுக்க வேண்டும். இதில், அரியலூர் மாவட்டத்துக்கு ரூ.2,700 கோடியை ஒதுக்கி சோழர்கால ஏரிகள் மற்றும் வரத்து வாய்க்கால்களை தூர் வாரி கட்டமைப்புகளை மீட்டெடுக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்தினால், மாவட்டம் முழுவதும் 50 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் கிடைக்கும்.

18 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும். எனவே, இந்தத் திட்டம் செயல்படும் வரை போராடுவேன். தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் 55 ஆண்டுகளாக நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால், தென்மேற்கு பருவமழைக் காலத்தில் கொள்ளிடம், காவிரி ஆறுகளில் 430 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்த நீரும் வீணாகத்தான் செல்லப் போகிறது. எனவே, மேட்டூரில் தொடங்கி கொள்ளிடம், காவிரி ஆறுகள் கடலில் கலக்கும் இடம் வரை 70 தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். இதன் மூலம் 70 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

முன்னதாக, நடைபயணத்தை திருவையாறு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வர் கவுசல்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கரைவெட்டி பறவைகள் சரணாலயம், கண்டராதித்தம் செம்பியன் மாதேவி பேரேரி, திருமழபாடி கொள்ளிடம் ஆறு, காமரசவல்லி சுக்கிரன் ஏரி ஆகியவற்றை அன்புமணி பார்வையிட்டார்.