கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ முறையிலான சம்பவம் இல்லை என மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில், ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், வெடி விபத்தில் கார் 2 துண்டாக உடைந்து, உருக்குலைந்து கிடப்பதை பார்க்கும் போது, காரில் பல கிலோ வெடிமருந்துகள் இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், வெடி விபத்து நடந்த பகுதியில் இருந்து கிலோ கணக்கில் ஆணிகள், சிறுவர்கள் விளையாடும் கோலி குண்டுகள், 3 டிரம்கள், 2 காஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றையும் அப்போது போலீஸார் கைப்பற்றினர். கார் வெடிவிபத்து தொடர்பாக பல்வேறு யூகங்கள் எழுந்தன.
பல்வேறு நாடுகளில் தாக்குதல்: இந்நிலையில், அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள், தங்களது எதிரிகளை அழிக்க பின்பற்றும் ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ முறையில் கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தீவிரவாத சிந்தனை உடையவர்கள், தனிப்பட்ட முறையில் தாக்குதல் மேற்கொள்வதே ஒற்றை ஒநாய் முறை ஆகும். பல்வேறு வெளிநாடுகளில் தீவிரவாத அமைப்புகளால் இந்த முறையிலான தாக்குதல்கள் அதிக அளவில் நடத்தப்பட்டுஉள்ளன.
அதேபோல், கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபின், கைது செய்யப்பட்ட அப்சர்கான், முகமது அசாருதீன் ஆகியோரின் பங்களிப்பு அதிகமாக உள்ளதை விசாரணையில் போலீஸார் கண்டறிந்துள்ளனர். இவர்கள் மூவரும் இணைந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள், டிரம்கள் ஆகியவற்றை வாங்கியுள்ளனர். அதற்கு முன்னதாகவே, அப்சர்கான் ஆன்லைன் வழியாக வெடிகுண்டு தயாரிப்பதற்கான ரசாயனங்களை வாங்கி வைத்துள்ளார்.
கார் வெடிப்பு நடந்த தினத்துக்கு முந்தைய நாள் இரவு 11.35 மணிக்கு முபினின் வீட்டிலிருந்து பெரிய மூட்டை வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. அதில் வெடிபொருட்கள் இருந்திருக்கலாம். அதற்கு பின்னர், விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு வரை முபின், அப்சர்கான், முகமது அசாருதீன் ஆகியோர் ஒன்றாகவே இருந்துள்ளனர், சம்பவத்துக்கு சில நாட்கள் முன்பு வரை இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர் என்பதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
ஆணையர் விளக்கம்: இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘கோவையில் நடந்த கார் வெடிவிபத்து சம்பவத்தை ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை எனக்கூற முடியாது. ஏனெனில் இந்த சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பங்கு உள்ளது’’ என்றார்.