என்.ஐ.ஏ. என்னை விசாரித்தால் ஆவணங்களை சமர்ப்பிப்பேன்- அண்ணாமலை

138 0

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ.அதிகாரிகள் முதலில் விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: கோவை சம்பவத்தில் முதலில் என்னைத்தான் என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சொல்லியிருக்கிறார்கள்.

என்.ஐ.ஏ. என்னிடம் விசாரித்தால் என்னிடம் உள்ள ஆவணங்களை அவர்களிடம் சமர்ப்பிப்பேன். இதை சிலிண்டர் வெடிப்பு என்று சொல்லச் சொல்லி யார் வலியுறுத்தினார்கள்? என எல்லாவற்றையும் சொல்ல தயாராக இருக்கிறேன். இதனால் மிகப்பெரிய பூதம் வெடிக்கும். பல உயர் அதிகாரிகளின் பதவிகள் பறி போக வாய்ப்பு இருக்கிறது. அந்த உயர் அதிகாரிகளுக்கு தி.மு.க. அமைச்சர்கள் நிர்பந்தம் கொடுத்தார்களா?

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் (செந்தில் பாலாஜி) இந்த சம்பவத்தை சிலிண்டர் வெடிப்பு தான் என்று சொல்ல சொல்லி வற்புறுத்தினாரா?, நேர்மையான போலீஸ் அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டது ஏன்? இதெல்லாமே என்.ஐ.ஏ. விசாரணையில் வர வேண்டும். எங்களிடம் உள்ள ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்கிய பிறகு பொதுவெளியில் வெளியிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.