ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எக்காரணிகளுக்காகவும் தனது தனித்துவத்தை விட்டுக்கொடுக்காது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் தனித்து போட்டியிடுவோம். ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பொதுஜன பெரமுனவின் கீழ் பரந்துப்பட்ட கூட்டணியை ஸ்தாபிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதியாக தெரிவு செய்து ஆதரவு வழங்கியுள்ளோம். குறைபாடுகளை மாத்திரம் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியினர் நெருக்கடியான சூழ்நிலையில் பொறுப்புகளை ஏற்க முன்வரவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் இனி வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காக கட்சியின் கொள்கையை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியாது.ஐக்கிய தேசிய கட்சி கொள்கைக்கும்,பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகிறது. தேசிய உற்பத்திகளுக்கு முன்னிலை வழங்கி தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் கொள்கைக்கு எதிராகவே பொதுஜன பெரமுனவின் கொள்கை காணப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்து போட்டியிட பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றதாகும். எக்காரணிகளுக்காகவும் கட்சியின் தனித்துவத்தை விட்டுக் கொடுக்க போவதில்லை.
கட்சியை மறுசீரமைக்கும் நடடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி மாநாடு எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டின் போது முக்கிய பல தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் புதிய அரசியல் கூட்டணியை பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் ஸ்தாபிப்போம் என்றார்.