ராஜபக்ஷக்களை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும்

138 0

நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்ஷக்களின் ஆட்சி அமைக்கப்பட்டால், தற்போதுள்ளதை விட கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

எனவே, மக்கள் அவர்களை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை பார்வையிடுவதற்காக அங்கு சென்றிருந்த சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்காமையே அவர்கள் நோய்களுக்குட்பட பிரதான காரணமாகும். இது அவர்களின் அடிப்படை உரிமை மீறலாகும்.

எனவே, இதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம்.

மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை உணர்ந்துகொள்ள முடியாவிட்டால், அந்த துயரத்துக்கு தாமே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இவ்வாறான ராஜபக்ஷக்களை மீண்டும் தெரிவுசெய்துவிட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ராஜபக்ஷக்களுக்கு இன்றும் அதிகார பேராசை காணப்படுகிறது. இதுவரை கொள்ளையடித்து, அதில் திருப்தியடைய முடியாமலேயே அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவோம் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர்.

எனினும், அவர்கள் முன்னெடுக்கும் இந்த முயற்சி ஒழுக்கமானதல்ல. இவ்வாறான செயற்பாடுகளுக்கு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் வரவேற்பிருக்காது.

எனவே, ராஜபக்ஷக்களை மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும். மாறாக, அவர்களது ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தினால் தற்போதுள்ளதை விட பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.