ஆயுள்வேத மருந்துக்கடை ஒன்றில் மருந்து வாங்க தனியாகச் சென்ற பெண் ஒருவரிடம், தானும் ஆயுள்வேத வைத்தியர் என்று கூறி, பெண்ணை வீடியோ எடுத்து அவரிடம் பாலியல் சில்மிசம் செய்ய முயன்ற காத்தான்குடியைச் சேர்ந்த கடை முதலாளியை, நேற்று (28) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
நகர் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர், கையில் ஏற்பட்டுள்ள தோல் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, சம்பவதினமான நேற்று (28) தனியார் வைத்தியசாலை ஒன்றின் விசேட வைத்திய நிபுணரிடம் சென்றுள்ளார்.
ஆயுள்வேத மருந்து ஒன்றை எழுதி கொடுத்த வைத்தியர், அதனை நகரில் உள்ள ஆயுள்வேத கடை ஒன்றின் பெயரை தெரிவித்து, அங்கு குறித்த மருந்தை வாங்கிப் பயன்படுத்துமாறு சிபாரிசு செய்துள்ளார்.
இதனையடுத்து, வைத்தியர் சிபாரிசு செய்த ஆயுள்வேத மருந்துக்கடையை தேடி குறித்த பெண் நேற்று இரவு 7.15 சென்ற போது அங்கு கடை ஒற்றக் கதவில் திறந்திருப்பதை கண்டுள்ளார்.
கடையை மூடி விடப் போகிறார்கள் என்று எண்ணிய குறித்த பெண், அவசர அவசரமாக கடைக்குள் சென்று வைத்தியர் எழுதி கொடுத்த மருந்து சிட்டையை கடை முதலாளியிடம் கொடுத்துள்ளார்.
இதன்போது கடைக்குள் தனியாக இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த கடை முதலாளி (வயது 34) தானும் ஆயுள்வேத வைத்தியர் என்று கூறியதுடன், “உங்கள் கண்ணை காட்டுங்கள் நான் பார்க்கின்றேன்“ என்று கூறியுள்ளார்.
அந்தப் பெண்ணும், அவரை வைத்தியர் என நினைத்து அவரிடம் கண்ணைக் காண்பித்தபோது, அவர் தனது அலைபேசியிலுள்ள வெளிச்சத்தை அடித்து கண்ணை பார்ப்பது போல வீடியோ எடுத்துக் கொண்டே பாலியல் சில்மிசம் செய்ய முயன்றுள்ளார்.
உடனடியாக சுதாகரித்துக் கொண்ட அப்பெண், வீடியோ எடுத்ததை கண்டு சத்தம் போட்டு அலைபேசியை பறிக்க முற்பட்ட போது, அலைபேசியில் எடுக்கப்பட்ட வீடியோவை உடனடியாக கடை முதலாளி அழித்துள்ளார்.
அந்த நேரத்தில் சதம்கேட்டு வீதியில் நின்றவர்கள் அங்கு ஒன்று திரண்டு கடை முதலாளியினால் அழிக்கப்பட்ட வீடியோவை மீண்டும் மீள எடுத்து்ள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், பொலிஸாருக்கு செய்த முறைபாட்டையடுத்து உடனடியாக கடை முதலாளியை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில், கைது செய்யப்பட்டவரை சான்றுப் பொருளான வீடியோ எடுத்த அலைபேசியையுடன், இன்று (29) ஆஜர்படுத்திய போது அவரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்ததுடன், எதிர்வரும் 2023 ஜனவரி 23ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.