நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,406 வாகன கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை முழுவதும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி வரை மொத்தம் 1,406 வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டு (2021) முழுவதும் 1405 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.
திருடப்பட்ட வாகனங்களில் 12 பேருந்துகள், 25 வேன்கள் ,16 லொறிகள், 14 கார்கள், 311 முச்சக்கர வண்டிகள், 1116 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 12 வகையான ஏனைய வாகனங்கள் உள்ளடங்குகின்றன.
மேலும் திருடப்பட்ட வாகனங்களில் பல வாகனங்கள் பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாகனத் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறும் பொலிஸார் வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.