கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்

167 0

யாழ்ப்பாணத்தில் ஜே/133 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – முள்ளி பகுதியில் விஷம் வைக்கப்பட்டு 35ற்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்துள்ளன. இதில் 3 குடும்பங்களின் கோழிகள் இவ்வாறு உயிரிழந்துள்ளன.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பெருமளவிலான கோழிகளை இழந்த குடும்பத்தின் வீட்டிற்கு சென்ற நபர் ஒருவர் கோழிகளை விலைக்கு கேட்டுள்ளார். விலைப்பிரச்சினை காரணமாக அவருக்கு கோழிகள் விற்பனை செய்யப்படவில்லை.

 

அதற்கு அவர் “எனது வயலில் விதைத்த நெல்லினை உங்களது கோழிகள் மேய்கின்றன. எனக்கு கோழிகள் தராவிட்டால் கோழிகளுக்கு விஷம் வைத்து கொலை செய்வேன்” என்று கூறிவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட குடும்பம் கூறுகிறது.

அத்துடன் பெருமளவிலான கோழிகளை இழந்த குடும்பம் பெண் தலைமைத்துவ குடும்பம் ஆகும். குடும்பத் தலைவன் உயிரிழந்த நிலையில் மகனும் தாயாருமே வசித்து வருகின்றனர். அவர்கள் மாடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பினையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர்.

கோழியை இழந்தவர்களின் வீடுகளுக்கு அருகில் விஷம் வைத்தவர் என கூறப்படுபவரது விவசாய காணிகள் உள்ளன. ஆனால் அங்கு உள்ள நெற்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள நிலையில் காணப்படுகின்றன. அத்துடன் காணியினுள் வெள்ளமும் காணப்படுகிறது.

ஆகையால் கோழிகள் தண்ணீருக்குள் இறங்காது என்றும் அப்படி இறங்கினாலும் நன்கு வளர்ந்த நெற்பயிர்களை கோழிகள் உட்கொள்ளாது எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர். அத்துடன் தமக்கு இழப்பீடும் நியாயமும் கிடைக்கப்பெற வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.