இலங்கை மனித உரிமைகள் ஆணையாளருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

105 0

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் ரோஹினி மாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் குழு, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் குறித்தும் அது மனித உரிமை ஆணைக்குழுவின்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் பயோலா பம்பலொனி உள்ளடங்கலாக இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் குழு நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விஜயம் மேற்கொண்டதுடன் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுபெற்ற) ரோஹினி மாரசிங்கவையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் குறித்தும், அது மனித உரிமைகள் ஆணைக்குழுவின்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டம், அண்மையகாலப் போராட்டங்கள் மற்றும் விசாரணைகள், அவ்விசாரணைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அரசினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் கேட்டறிந்தனர்.

அத்தோடு மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயன்முறையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்த ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், ஆணைக்குழுவின் செயற்பாடுகளை வரவேற்றதுடன் அவர்களுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.