வரி அதிகரிப்பு மாத்திரம் பொருளாதார மீட்சிக்கான கொள்கையாக இருந்தால் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது சிக்கலானதாக அமையும். எனவே 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான கொள்கை திட்டத்தை ஜனாதிபதி முன்வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
நாவல பகுதியில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தை எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி முதல் நடத்த பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளது.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் எதிர்வரும் நிதியாண்டுக்காக சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டம் தீர்மானமிக்கது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும். விவசாயிகள், அரச ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் உட்பட மாத வருமானம் பெறும் தரப்பினர் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்கள் மீது வரிசுமையை சுமத்தி , பிறிதொரு தரப்பினருக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கினால் அரசாங்கம் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். வங்குரோத்து நிலையை அடைந்துள்ள நாட்டை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
நாட்டு மக்கள் மீது வரி அறவிடல் ஊடாக வரி சுமையை சுமத்தாது பொருளாதார மீட்சிக்கான சிறந்த கொள்கை திட்டங்களை அரசாங்கம் முன்வைக்காவிடின் வரவு செலவு திட்டத்திற்க சார்பாக வாக்களிப்பது சிக்கலானதாக அமையும். வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தால் ஆட்சிமாற்றம் ஏற்படும்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து அரசாங்கம் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதில் மாத்திரம் அவதானம் செலுத்துகிறது.
நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எப்பிச்சனைக்கும் தீர்வு காண முடியாது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டால் அரசாங்கம் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.