நாட்டினுள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி, ராஜபக்ஷாக்களே சிறந்தவர்கள் அவர்களால் மாத்திரமே மீண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று மக்களை நம்பவைப்பதற்கான அரசியல் சூழச்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார்.
அவரது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ராஜபக்ஷாக்கள் தமது தோல்விகளை மறந்து , தம்மால் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற காரணியை ஒவ்வொரு மாவட்டங்களிலும் சென்று கூறிக் கொண்டிருக்கின்றனர். ராஜபக்ஷாக்கள் வீடுகளில் தலைமறைவாகியிருந்தனர்.
இவ்வாறு தலைமறைவாகியிருந்தவர்கள் இன்று வெளியில் வந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதாகக் கூறுகின்றனர். இதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்பு கூற வேண்டும்.
கொள்ளையர்களுடன் இணைந்து , மற்றொரு கொள்ளை கூட்டத்தை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
தற்போது பாரதூரமான வரி அதிகரிப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் நாமல் ராஜபக்ஷ , ‘எமது ஆட்சி காலத்தில் இவ்வாறு வரி அதிகரிப்புக்கள் இடம்பெறவில்லை.’ என்று கூறுகின்றார். அவ்வாறெனில் தற்போதிருப்பது யாருடைய அரசாங்கம்? ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமா?
தற்போதுள்ள அமைச்சரவையில் அங்கத்துவம் வகிப்பவர்கள் அனைவரும் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துவபர்களே என்பதை நாமல் ராஜபக்ஷவிற்கு நினைவுபடுத்துகின்றோம்.
வரி சலுகைகள் மூலம் கொள்ளையிட்ட கூட்டத்துடன் இணைந்து சர்வதேச நாணய நிதியத்தைக் காட்டிக் கொடுத்து மேலும் வரி அதிகரிப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகிக் கொண்டிருக்கின்றார்.
இந்த வரி அதிகரிப்பு மூலம் சிறு தொழில் மற்றும் ஏற்றுமதித்துறை பாரியளவில் பாதிக்கப்படும். இதன் காரணமாக தற்போதிருப்பதை விட பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
இது ஒரு அரசியல் சூழ்ச்சியாகும். இது நாமல் ராஜபக்ஷவிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ஷாக்களே சிறந்தவர்கள் என்றும் , அவர்களால் மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் மக்களுக்கு காண்பிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
பதவி நீங்கும் காலத்தில் மீண்டும் அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அவர் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
எனவே மீண்டும் ராஜபக்ஷாக்களை அரசியலுக்குள் கொண்டு வருவதற்காக நாட்டினுள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி, ராஜபக்ஷாக்களை நாட்டை மீட்பார்கள் என்று மக்களை நம்ப வைப்பதற்காகவே இந்த சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. எனினும் இந்த சூழ்ச்சி வெற்றியளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என்றார்.