வெலிக்கடை சிறைக்குச் சென்றார் அமைச்சர் விஜயதாச

111 0
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ  இன்று காலை (28) வெலிக்கடை சிறைச்சாலைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.  கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சிறைச்சாலையில் உள்ள வசதிகள் தொடர்பில் கண்காணிக்கும்  விதமாக அங்கு சென்றிருந்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்கள் உட்பட கைதிகளின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடியதுடன், சிறைச்சாலை சமையலறை மற்றும் தொழிற்சாலை வளாகத்தின் வேலைகளும் விசேட அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டன.

மேலும், கைதிகள் எதிர்நோக்கும் நடைமுறை மற்றும் சட்டப் பிரச்சினைகள்  குறித்தும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழுக்கள், குறிப்பாக நீண்டகாலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் எதிர்பார்த்த பலன்களைப் பெறவில்லை என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக புதிய மீளாய்வுக் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இதன்போது அமைச்சர் குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக சிறையில் உள்ள  கைதிகள், நோயுற்ற கைதிகள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் திருத்தப்படும் எனவும், இதற்கான சட்டமூலங்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.