கேப்பாபிலவு மக்களுக்கான ஆதரவு ஒன்றுகூடல் – சிட்னி

296 0

தமிழர் வாழும் பிரதேசங்களிலிருந்து சிறிலங்கா படையினரை வெளியேறுமாறு கோரி தமிழர் தாயகமெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒஸ்ரேலியாவின் சிட்னியில் தமிழர் ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை 17 – 02 – 2017 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் நூறு வரையான தமிழர்கள் பங்குகொண்டு தமது தாயக உறவுகளுக்கான ஆதரவை தெரிவித்தனர்.

குறுகிய கால அறிவிப்போடு பலரும் வருகைதந்து கடுமையான மழைக்கு மத்தியிலும் நனைந்துகொண்டு நிகழ்வில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றிய நியுசவுத் வேல்ஸ் மாநிலவை உறுப்பினர் கேக் மக்டேமைற் “போர் ஓய்வுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் தமிழர் பாரம்பரிய வாழ்விடங்களை விவசாய நிலங்களை மீன்பிடி பிரதேசங்களை இராணுவம் தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றது. இவற்றை விடுவிக்குமாறு மாநிலவையில் எடுத்துச்சொல்வதுடன் சிறிலங்கா அரசுக்கும் அதனை தெரியப்படுத்துவேன். இதற்கான வெளிப்படையான அறிக்கைகளையும் உரியமுறையில் வெளியிடுவேன். உங்கள் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவன் என்ற வகையில் என்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.

நிகழ்வின்போது “எங்கள் நிலங்கள் எமக்கு வேண்டும்” “இராணுவமே வெளியேறு” “எமக்கு தேவை சுதந்திரம்” என பல கோசங்கள் ஒலிக்கப்பட்டன.தாயக உறவுகளின் போராட்டங்களோடு அவர்களுக்கு ஆதரவுக்குரலாக எப்போதும் நாங்கள் இருப்போம் எனவும் அனைவரும் உறுதியெடுத்துக்கொண்டதோடு நிகழ்வு நிறைவடைந்தது.