பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் அவ்வாறு மேற்கொள்ள முயற்சிப்பது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகும் எனவும் சபை முதல்வரும் அமைச்சருமான (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த கடந்த 19 ஆம் திகதி தெரிவித்தார்.
தற்பொழுது சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு தயாராகுவதாக ஊடகங்கள் மூலம் அறிக்கையிடப்படுவதாகவும் அது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விசேடமாக தேர்தல் ஒன்றின் மூலம் பொதுமக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதாகவும், மக்கள் பிரதிநிதிகளை மாற்ற வேண்டும் எனின் தேர்தல் மூலம் அதனை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால், இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வது சட்டரீதியானது அல்ல எனவும் அது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்களால் முன்வைக்கப்பட்ட பாராளுமன்ற சிறப்புரை மீறப்பட்டுள்ளமை தொடர்பான விடயத்தை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரை பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.