இனவாதமும் மதவாதமும் இலங்கைத் திருநாட்டைத் தோல்வியடைய வைத்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
“இன, மத வாதங்களால் வெற்றிபெற்ற ஆட்சியாளர்களும் தோற்கடிக்கப்பட்ட இலங்கைத் திருநாடும்” என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அடிப்படை வாதங்களான இனவாதம், மதவாதம், நிறவாதம், குலவாதம், பிரதேசவாதம் என்பன பல்லின மக்களின் தேசிய ஒற்றுமைக்கு சவால்களாக அமைகின்றன.
அந்தவகையில் இலங்கையில் இனவாதம், மதவாதம் என்பவை கூர்மையான பிரிவினை ஆயுதங்களாக மாறி பல்லின மக்களின் தேசிய ஒற்றுமையைப் பிளவுபடுத்தி வந்துள்ளது.
அந்தவகையில் சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள இன, பெளத்தமத அடிப்படை வாதத்தினை அரசியல் முதலீடாகப் பிரயோகித்து தேர்தலில் வெற்றிகளைக் குவித்து வந்துள்ளனர்.
பண்டாரநாயக்க, ஸ்ரீமா, ஜெயவர்தனா, மகிந்த, கோட்டாபய போன்ற அரசியல் தலைவர்கள், தேர்தல் சந்தைகளில் வெற்றிகொள்வதற்காக இனவாத மதவாதப் பேச்சுகள், செயல்களால் அரசியலை அனல்களாக மாற்றி தேர்தல்களில் வெற்றிக்கனியைப் பறித்துக் கொண்டனர்.
அதன் பின்னர் அதிகாரத்திமிர்களோடு நாட்டை ஆட்சி செய்து சுகபோகமாக வாழ்த்துள்ளனர்.
74 சதவீதமான சிங்கள மக்கள் 74 ஆண்டுகளாக இனமதவாதிகளுக்கு வெற்றிகளை வழங்கினர். ஆனால், வெற்றி பெற்ற தலைவர்கள், நாட்டுக்கும், மக்களுக்கும் படுதோல்விகளையே பெற்றுக்கொடுத்தனர்.
தேசிய ஐக்கியம், தேசிய பொருளாதாரம், ஒற்றையாட்சி முறை, பல்லின மத இணக்கப்பாடு, புத்திஜீவிகளின் பங்களிப்பு, செயற்பாடு குறைந்த கோட்பாட்டுக் கல்வி முறை, தொழில் வாய்ப்பு, புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்பு, அரசியல் கட்சிகளின் அர்ப்பணிப்பு, தேசிய வளப்பயன்பாடு போன்ற அனைத்தும் தோல்வியடைந்ததால் நாடு தோற்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
நுகர்வுப் பணவீக்கம் 74 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 94 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பொருட்களின் விலைவாசி தொடர்ந்தும் ஏறிக்கொண்டுள்ளது.
மக்களின் வருமானம் குறைந்த மட்டத்தில் உள்ளது. இதனால், மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர்.
கடன்கள் கேட்டு மண்டாடுகின்றனர். நாடு மத்தியதர வருமானத்தில் இருந்து ஏழை நாடாக மாறியுள்ளதாக அமைச்சரவை பிரகடனம் செய்துள்ளது.
உலகளவில் பட்டினி வலய நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 97 இலட்சம் மக்கள் பட்டினியோடு வாழ்வதாக பொருளியல் கலாநிதியான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் 7 இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். எனவே, தேர்தல்களின் போது இனவாதிகள், மதவாதிகள், அடிப்படை வாதங்களால் வெல்லுகின்றனர். ஆனால், நாடும் மக்களும் தோல்வியுற்ற நிலையில், நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது.
வெற்றியடையும் அடிப்படைவாதிகள் பலர் அதிகார நாற்காலிகளில் இருந்து கொண்டு சுயவிருத்தி அரசியலில் ஈடுபடுகின்றனர். ஊழல், மோசடிகள், கையூட்டுகளுக்கு இங்கு தட்டுப்பாடுகள் இல்லை. ஆள்வோர்கள் செல்வத்தில் திழைக்கின்றனர்.
ஆளப்படும் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மை வறுமையில் மிதக்கின்றனர். உயரே பறக்கும் பட்டங்களாய் ஆட்சியாளர்கள் பளபளக்கின்றனர். பறக்க உதவும் நூல்களாய் ஏழ்மையில் மக்கள் அல்லலுறுகின்றனர்.
மொத்தத்தில் இனவாதமும் மதவாதமும் இலங்கைத் திருநாட்டைத் தோல்வியடைய வைத்துள்ளது. தொழிலாளர் வர்க்க, மத்தியதர வர்க்க மக்களை வறுமைக்குள் தள்ளியுள்ளது. இன, மத அடிப்படைவாதங்களால் அரசியலில் வெற்றிபெறும் ஆட்சியாளர்கள், ஊழல், மோசடிகளால் தமது பொருளாதாரத்தை வளம்படுத்திக்கொள்கின்றனர்”என்றுள்ளது.