ஒரு கட்சி அரசு நிலையில் இருந்து ஒரு தலைவர் அரசு என்ற நிலை நோக்கி……!

218 0

சீன ஜனாதிபதி சி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தாபக தலைவர் மாவோ சேதுங்கிற்கு பிறகு ஆயுட்காலத்துக்கு நாட்டை ஆட்சிசெய்யக்கூடிய வாய்ப்புடன் முன்னென்றும் இல்லாத வகையில் முன்றாவது பதவிக்காலத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.16) தெரிவாகியதன் மூலம் வரலாறு படைத்திருக்கிறார்.உலகில் ஆட்சியாளர்கள் தங்களது பதவிக்காலங்களை நீடிப்பதில் ஆர்வம் காட்டுகின்ற அதேவேளை அவர்களின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என்று மக்கள் ஆரவாரமாக வேண்டுகின்ற சூழ்நிலையில் சீன ஜனாதிபதியின் செயல் வரலாற்றின் முன்னோக்கிய போக்காக அன்றி பின்னோக்கிய போக்காகவே பெரும்பாலும் கருதப்படும்.

69 வயதான சி தனது ஆதரவாளர்களினால் நிரப்பப்பட்ட எழுவர் கொண்ட புதிய நிலையியல் குழுவினால் மூன்றாவது ஐந்து வருட பதவிக்காலத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஞாயிறு காலை தெரிவுசெய்யப்பட்ட பிறகு பெய்ஜிங்கின் மக்கள் மகா மண்டபத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தோன்றியபோது அது ‘ புதிய சி யுகத்தின் ‘ தொடக்கம் என்று  வர்ணிக்கப்பட்டது.

 

அதிகாரத்தில் மூன்றாவது பதவிக்காலத்துக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மகாநாட்டில் சி ‘முறைப்படி’ தெரிவுசெய்யப்பட்டதையடுத்து மாவோவைத் தவிர, அவருக்கு  முன்னர் அதிகாரத்தில் இருந்த தலைவர்களினால் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த  ஆட்சிமுறை முடிவுக்கு வருகிறது. ஒழுங்கு முறையான அதிகார மாற்றத்தைக் கண்ட அந்த மூன்று தசாப்தங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் அதன் வழியாக ஜனாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் இரு ஐந்து வருட பதவிக்காலங்களுக்கு அதிகாரத்தில் இருந்துவிட்டு பிறகு அடுத்தவர்களுக்கு வழிவிட்டு பதவியில் இருந்து இறங்கினார்கள்.அந்த ஒழுங்கு முறையின் பிரகாரம் 2012 கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வது மகாநாட்டில் பொதுச்செயலாளராக தெரிவான சி இவ்வருடம் பத்து வருட பதவிக்காலத்தை பூர்த்தி செய்கிறார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி 1949 அக்போர் முதலாம் திகதி கம்யூனிஸ்ட் சீனாவை(மக்கள் சீனக்குடியரசை) பிரகடனம் செய்த பிறகு 27 வருடகாலமாக –ஆயுட்காலம் வரை — மாவோ அதிகாரத்தில் இருந்ததைப்போன்று மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்வதற்காகவே டெங் சியாவோபிங்கிற்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் அரச தலைவராக அதிகாரத்தில் இரு ஐந்து வருட பதவிக்காலங்களுக்கு பதவியில் இருக்க வழிவகுக்கும் நடைமுறையை கட்சி பின்பற்ற தொடங்கியது.

அந்த பதவிக்கால மட்டுப்பாட்டை 2017 கம்யூனிஸ்ட் கட்சியின் 19  மகாநாடு அகற்றியது.அப்போதே சி மூன்றாவது ஐந்து வருட பதவிக்காலத்துக்குப் பிறகு தொடர்ந்து ஆயுட்காலம் வரைக்கும் அதிகாரத்தில் இருக்கும் திட்டத்தை வகுத்துவிட்டார் என்பது தெரிந்தது.

அதிகாரப் படிநிலையில் இரண்டாவதாக இருந்த பிரதமர் லீ கெக்கியாங் கடந்த சனிக்கிழமை (அக்.15) 300க்கும் அதிகமான உறுப்பினர்களைக்  கொண்ட மத்திய குழுவுக்கு தெரிவாகவில்லை.இவர் ஒரு மிதவாதப் போக்குடையவராக நோக்கப்பட்டவர்.ஞாயிறு காலை கூடிய மத்திய குழு 25 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் குழுவை தெரிவுசெய்தது.பிறகு அரசியல் குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட நிலையியல் குழு  மூன்றாவது பதவிக்காலத்துக்கு சியை பொதுச்செயலாளராக தெரிவுசெய்தது.

இந்த செயன்முறைகள் சீன அரசியல் நிலைவரங்களை உன்னிப்பாக அவதானித்துவருபவர்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை.சனியன்று  மத்திய குழுவுக்கும் பிறகு ஞாயிறன்று அரசியல் குழுவுக்கும் இறுதியாக நிலையியல் குழுவுக்கும் சி தெரிவுசெய்யப்பட்டமை எல்லாம் சிக்கலின்றி நடந்தேறின. சியின் ‘மைய அந்தஸ்தை ‘ வலுப்படுத்தும் வகையில் கட்சியின் அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றை நிறைவேற்றிய மகாநாடு அவரின் ஆணைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றுவது கட்சியின் சகல உறுப்பினர்களினதும் ‘கடப்பாடாகும்’என்று பணித்தது.

மாவோவின் பாதச்சுவட்டில் ஆயுட்காலத்துக்கு அதிகாரத்தில் இருக்கக்கூடிய வாய்ப்புடன்– ஜனாதிபதியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக, இராணுவத்தின் தலைவராக — சியின்  வெளிக்கிளம்பல் சீனா ‘ஒரு கட்சி அரசு’ என்ற நிலையில் இருந்து இப்போது ‘ஒரு தலைவர் அரசாக’ மாறுவதாக  சஞ்சலத்துடன் பரவலாக  நோக்கப்படும் என்று அவதானிகள் கூறுகிறார்கள்.

சி இப்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டார்.மாவோவை விடவும் ‘உயர்ந்தவராக’ தன்னை அவரால் பிரகடனப்படுத்தவும் கூட  முடியும். அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மகாநாடு கொடுத்திருக்கும் அந்தஸ்து மாவோவைக் கூட பொறாமைப்படுத்தக்கூடும்; டெங் மிகவும் கவலைப்படக்கூடும்.

முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட செயலொழுங்கின் பிரகாரம் நடந்தேறிய மகாநாடு வெறுக்கத்தக்க ஒரு சம்பவத்துடன்  முடிவடைந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.பத்து வருடங்களுக்கு முன்னர் சியிடம் அமைதியான முறையில் அதிகாரத்தைக் கையளித்த 79 வயதான முன்னாள் ஜனாதிபதி ஹூ ஜின்டாவோ சியுடன் எதையோ பேச முனைந்தபோது அவரை ஊடகங்கள் பார்த்திருக்க  இரு அதிகாரிகள் கையில் பிடித்து மகாநாட்டு மண்டபத்துக்கு வெளியே அழைத்துச்சென்றனர்.ஆனால் உத்தியோகபூர்வ ஊடக செய்திகள் அவர் உடல் நலமின்றி இருந்ததாக கூறின.

இது இவ்வாறிருக்க, புதிய பிரதமரின் தலைமையிலான புதிய மத்திய  நிருவாகம் 2023 மார்ச்சில் முறைப்படி பொறுப்பை ஏற்கும்.தற்போது சங்காயில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருக்கும் லீ கியாங் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.ஷெயியாங் மாகாணத்தின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக சி இருந்தவேளை அவரின் பிரதம அதிகாரியாக பணியாற்றியவர்தான் இந்த லீ கியாங்.முன்னர் பிரதி பிரதமராக இருந்தவர்களில் ஒருவர்தான் பிரதமராக பதவிக்கு கொண்டுவரப்படுவது வழமையானதாக இருந்தது.லீக்கு அத்தகைய முன்கூட்டிய அனுபவம் எதுவும் கிடையாது என்றும் அவரின் இந்த உயர்ச்சிக்கு சி மீதான விசுவாசம் ஒன்று மாத்திரமே காரணம் என்றும் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

சனிக்கிழமை மகாநாட்டில் முடிவுரை நிகழ்த்திய ஜனாதிபதி சி, ” அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றங்கள் கட்சியின் ஒட்டுமொத்த தலைமைத்துவத்தை ஆதரவளித்து பலப்படுத்துவதற்கு தேவையானவையாகும்.போராடத் துணிச்சல் கொள்ளுங்கள். வெற்றிபெற துணிச்சல் கொள்ளுங்கள்.தலையைக் குனிந்துகொண்டு கடுமையாக உழையுங்கள்.முன்னோக்கிச் செல்வதற்கு திடசங்கற்பம் பூணுங்கள். பயங்கரமான சூறாவளிக்கும் கொந்தளிக்கும் கடல்களுக்கும் முகங்கொடுக்க தயாராகுங்கள்” என்று அறைகூவல் விடுத்தார்.

சியையும் மார்க்சிசத்தை சீனப் பண்புகளுடனான சோசலிசத்துடன் இணைக்கும்  அவரது சிந்தனைகளையும் வானளாவப் புகழ்வதற்கு மகாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட திருத்தம் ஒன்று தொடர்பான தீர்மானம் சியின் தலைமைத்துவத்தை கட்சியின் சகல உறுப்பினர்களும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தியது.தோழர் சியின் மைய அந்தஸ்துடனான மத்திய குழுவின் உறுதியான தலைமைத்துவத்தை பின்பற்றி கட்சியின் சகல மட்டங்களில் உள்ள அமைப்புக்களும் உறுப்பினர்களும் சீனப்பண்புகளுடனான சோசலிசத்தின் மகத்தான பதாதையை உயர்த்திப்பிடிக்கவேண்டும்.புதிய யுகமொன்றுக்கான சீனப் பண்புகளுடனான சோசலிசம் தொடர்பான சி ஜின்பிங் சிந்தனையே சமகால சீனாவினதும் 21 ஆம் நூற்றாண்டினதும் மார்க்சிசமாகும்.அது சிறந்த சீனக் கலாசாரத்தையும் இந்த யுகத்தின் பண்புகளையும் உருவகப்படுத்தி நிற்கிறது என்று தீர்மானங்கள் கூறின.

ஒட்டுமொத்தத்தில் சியை சுற்றி சீனா அணிதிரளவேண்டும் என்பதே 2,338 பேராளர்கள் கலந்துகொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மகாநாட்டின் அறைகூவலாகும்.சி இன்று ஒரு கம்யூனிஸ்ட் நாட்டின் தலைவர் என்ற நிலையில் இருந்து கம்யூனிஸ்ட் சக்கரவர்த்தியாக தன்னை உயர்த்தியிருக்கிறார்.

சில அவதானிகள் சியின் இன்றைய அந்தஸ்தை தங்கு தடையின்றிய முற்றுமுழுதான அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமெனியின்  அந்தஸ்துடன் ஒப்பிடுகிறார்கள்.ஆனால், சீனர்கள் அந்த ஒப்பீட்டை விரும்புவார்களோ என்னவோ தெரியவில்லை.

வீரகத்தி தனபாலசிங்கம்