வெற்றியை நோக்கிய பேராவலுடன் உருவாக்கப்படும் வரவு, செலவுத்திட்டம் அவ்வெற்றியை அடைவதை முன்னிறுத்திய எந்தவொரு தெளிவான திட்டத்தையும் கொண்டிராமையானது இலங்கையின் வரவு, செலவுத்திட்டத்தயாரிப்பு செயன்முறையின் பிரதான குறைபாடாகும் என்று வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் தொடர்பில் ‘கடந்தகால இடர்ப்பாடுகளைத் தவிர்த்தல்’ என்ற தலைப்பில் நிகழ்நிலை முறைமையிலான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் வெரிட்டே ரிசேர்ச் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அக்கலந்துரையாடலில் வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நிஷான் டி மெல் மற்றும் அவ்வமைப்பின் சிரேஷ்ட ஆய்வாளர்களான ராஜ் ராஜகுலேந்திரன், சுமினி சியம்பலாப்பிட்டிய ஆகியோர் தமது ஆய்வு விளக்கங்களை முன்வைத்ததுடன் அதுகுறித்த நிபுணத்துவக் கலந்துரையாடலில் உலக வங்கியின் அபிவிருத்திப்பொருளாதாரத்துறைக்கான முன்னாள் சிரேஷ்ட பணிப்பாளர் ஷாந்தயனன் தேவராஜன், பேராதனை பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியர் டிலெனி குணவர்தன, கே.பி.எம்.ஜி நிறுவனத்தின் வரி மற்றும் ஒழுங்குபடுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி சுரேஷ் பெரேரா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
வெற்றியை நோக்கிய பேராவலுடன் உருவாக்கப்படும் வரவு, செலவுத்திட்டம் அவ்வெற்றியை அடைவதை முன்னிறுத்திய எந்தவொரு தெளிவான திட்டத்தையும் கொண்டிராமையானது இலங்கையின் வரவு, செலவுத்திட்டத்தயாரிப்பு செயன்முறையின் பிரதான குறைபாடாகும் என்று இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
உதாரணத்திற்கு இவ்வரவு, செலவுத்திட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டப்பற்றாக்குறையானது 0.7 சதவீதமாக இலக்கிடப்பட்டிருப்பதுடன் அதனை அடைவதற்கான குறைந்தபட்ச வருமான அதிகரிப்பு 68 சதவீதமாக அமையவேண்டும்.
இருப்பினும் நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் அத்தகைய அதிகரிப்பு ஒரேயொருமுறை 1978 ஆம் ஆண்டில் மாத்திரமே அடையப்பட்டிருக்கின்றது என்று இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிறைவேற்றப்படமுடியாத, நடைமுறைச்சாத்தியமற்ற வரவு, செலவுத்திட்ட வாக்குறுதிகள் நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்துநிலையை அடைவதற்கு வழிவகுக்கும் என்று என்று இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த உலக வங்கியின் அபிவிருத்திப்பொருளாதாரத்துறைக்கான முன்னாள் சிரேஷ்ட பணிப்பாளர் பேராசிரியர் ஷாந்தயனன் தேவராஜன் சுட்டிக்காட்டினார்.
மேலும் நிதியியல் நியமங்களுக்கு அமைவாகச் செயற்படுவதில் இலங்கை அடைந்திருக்கும் தோல்வி, அரசியலமைப்பிற்கு முரணான சில வரி அறவீட்டுக்கொள்கைகள் மற்றும் தேசிய வரவு, செலவுத்திட்டம் தொடர்பில் போதிய வெளிப்படைத்தன்மையின்மை ஆகிய 3 விடயங்களும் நாடு முகங்கொடுத்திருக்கும் இடர்ப்பாடுகளுக்கு முக்கிய காரணம் என்று தமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த 48 சதவீதமான செலவின முன்மொழிவுகள் குறித்த விபரங்கள் இன்னமும் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதுடன், அவை ‘வெளிப்படைத்தன்மை’ தொடர்பில் குறித்தளவிலான இடைவெளியைத் தோற்றுவித்திருப்பதாகவும் அதுபற்றி எதிர்காலத்தில் அவதானம் செலுத்தவேண்டியது அவசியம் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டிருக்கும் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு குறித்த தகவல்கள் இன்னமும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படாத நிலையில், வெளிப்படைத்தன்மை தொடர்பான கலந்துரையாடலில் இவ்விடயம் பற்றியும் பேசப்பட்டது.
அடுத்ததாக வரி அறவீட்டுக்கொள்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய பாரிய மாற்றங்கள் தற்போதைய நெருக்கடிகளுக்கான முக்கிய காரணமாக அடையாளங்காணப்பட்டதுடன், கடந்த 2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சில வரிகளை அறவிடுவதற்குத் தவறியதன் விளைவாக வருமானத்தில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி உள்ளடங்கலாக கொள்கை ரீதியில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.