பரந்தளவிலான கூட்டணியுடன் தேர்தலுக்கு செல்வதே ஜனாதிபதியின் திட்டம்

132 0

பரந்தளவிலான சுட்டணி அமைத்துக்கொண்டு தேர்தலுக்கு செல்வதே ஜனாதிபதியின் திட்டம். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு பாராளுமன்றத்தில் பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தபதெனிய தொகுதி அமைப்பாளர் பாரத தென்னகோன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும்வரை தேர்தல் ஒன்றுக்கு செல்வது பொருத்தம் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.

மக்களும் தற்போது தேர்தலை நடத்துமாறு கேட்பதில்லை. மாறாக பொருட்களின் விலைகளை குறைத்து நிம்மதியாக வாழ முடியுமான சூழலை ஏற்படுத்தவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கே ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி தற்போது மேற்கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தில் மக்கள் திருப்திகண்டு வருகின்றனர்.

அத்துடன் தேர்தல் நட்ததவேண்டும் என எதிர்க்கட்சியே  கூட்டங்களை நடத்தி கோரி வருகின்றது.  ஏனெனில் மக்கள் எதிர்கொண்டுவந்த பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி படிப்படியாக தீர்வு கண்டு வருகின்றார்.

இது இவர்களுக்கு பிடிக்காது. மக்களுக்கு பிரச்சினை இருக்கவேண்டும் என்றே இவர்கள் விரும்புகின்றனர். அப்போதுதான் இவர்களுக்கு மக்கள் முன் சென்று கதைக்க முடியும்.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வு கண்டு விடுவார் என்ற பயமும் இவர்களுக்கு இருக்கின்றது. அதனால்தான் விரைவாக தேர்தலுக்கு செல்வேண்டும் என மக்களை தூண்டி வருகின்றனர்.

மேலும் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் பரந்துபட்ட கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்கு முகம்கொடுக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராகி வருகின்றது.

இதுவே ஜனாதிபதியின் திட்டமாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார். அதேநேரம் நாட்டை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டு வரும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளித்து, அவருடன் இணைந்து செயற்பட  பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்லாது, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலரும் தயாராகி இருக்கின்றனர். என்றாலும் ஜனாதிபதி அவர்களை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கின்றார். தேர்தல் ஒன்று நெருங்கும்போது அவர்கள் அனைவரும் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள் என்றார்.