உலகில் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஐக்கிய அரபு இராச்சிய நகரம் அமைக்கும் திட்டம் அடுத்த 100 ஆண்டுகளில் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஐக்கிய அரபு இராச்சிய நகரத்தை 100 ஆண்டுகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு இராச்சிய துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் கூட்டாக வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உலகில் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஐக்கிய அரபு இராச்சிய நகரம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் அடுத்த 100 ஆண்டுகளில் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வரும். இங்கு வசிக்கும் மக்களை இதே வசதிகளுடன் செவ்வாய் கிரகத்தில் தங்க வைத்து, அங்கும் ஓர் உயிரின வாழிடம் ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
மனிதனுடைய குறிக்கோள்களுக்கு எல்லையில்லை. இதில் கனவாக உள்ள அனைத்தும் நிறைவு செய்யும் வாய்ப்பு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிக நீண்ட திட்டமாகும். அடுத்து வரும் தலைமுறைகள் இந்த பலனை அனுபவிப்பார்கள். இந்த திட்டத்தை மேம்படுத்த அமீரகத்தில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் படிக்கும் மாணவர்களை கொண்டு படிப்படியாக கட்டமைக்கப்படும்.
பூமிக்கு அடுத்தபடியாக மனிதர்கள் வாழ குறைந்தபட்ச தகவல் அமைப்புகள் செவ்வாய் கிரகத்தில் உள்ளன. இதில் குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் சராசரி வெப்பநிலை 63 டிகிரி செல்சியசாக உள்ளது. ஒருமுறை சூரியனை சுற்றி வருவதற்கு 687 நாட்கள் ஆகும். இங்கு பூமியில் இருந்து 2021-ம் ஆண்டு மனிதர்கள் சென்று ஆய்வு நடத்த உள்ளார்கள். இதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சார்பிலும் ஒரு விண்கலம் உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த செவ்வாய் கிரக நகரமைப்பு திட்டத்தின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மனித குலத்திற்கு பயன்படும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு விதைதான். இது தரும் பழங்களை நமது எதிர்கால சந்ததிகள் ருசி காணட்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.