சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுசெயலாளர் சசிகலா நடராஜன் சிறப்பு விடுகையில் வெளியில் வர முயற்சி எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
நான்கு ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களுர் பரப்பனா – அக்ரஹாரா சிறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ் நாட்டின் புதிய முதல்வராக ஈ.பி.எஸ் எனப்படும் எடபாடி கே பழனிச்சாமி பதவி ஏற்றுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பழனிச்சாமி பதவி ஏற்ற சில நிமிடங்களிலேயே பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டிருந்த அரச வாகனம் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
தற்போது அவர் தங்கியுள்ள வீட்டையும் உடனடியாக அரசாங்கத்துக்கு கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் யார் என்று தீர்மானிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளையதினம் சட்டமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.