மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தொழில் புரியும் ஊழியர் ஒருவரை கடத்திச் சென்று அவரிடமிருந்து 21 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கடந்த 4 ஆம் திகதி மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொரட்டுவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஊழியர் ஒருவர் வர்த்தக நிலையத்திற்கு சொந்தமான சுமார் 21 இலட்சம் ரூபாய் பணத்தினை வங்கியில் வைப்பு செய்வதற்காக கொண்டு சென்றபோது அவரை கடத்தி சென்று தாக்குதலுக்கு உட்படுத்தி அவரிடம் இருந்த பணத்திணை சிலர் கொள்ளையிட்டு சென்று இருந்தார்கள்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சம்பவத்தோடு தொடர்புடைய இருவர் இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 45 மற்றும் 50 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் இரத்மலானை மற்றும் கல்கிஸ்ஸ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளைச் சம்பவத்தின் போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன், மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் கூரிய ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டுள்ளார்கள் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.