தெல்தெனிய விக்டோரியா அணையின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ட்ரோன் கெமரா மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்தெனிய பகுதியில் விக்டோரியா அணையின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி, சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கெமரா மூலம் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்த 7 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
கைதான சந்தேக நபர்கள் 31 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தெஹிவளை மற்றும் வெலிகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் அங்கிருந்த அதிகாரியிடமிருந்து அனுமதி பெறாமல், சட்டவிரோதமான முறையில் அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ட்ரோன் கெமரா மூலம் வீடியோ, புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
அவர்கள் சுற்றுலா நிமித்தம் அப்பகுதிக்கு வருகை தந்துள்ளதாகவும், அப்போது இராணுவ அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்டும் அதனை பொருட்படுத்தாமல் இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள், தாம் வைத்திருந்த ட்ரோன் கெமரா, அதனுடன் தொடர்புடைய சாதனங்கள் மற்றும் அவர்கள் வருகை தந்திருந்த வேன் முதலியவற்றோடு தெல்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.