கட்டுநாயக்க – ராஜுல வீதியில் தங்கச் சங்கிலி கொள்ளையர்கள் என கூறப்படும் இருவர் மீது பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் பலத்த காயங்களுடன் நீர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர் கொழும்பிலிருந்து குறித்த கொள்ளையர்களை, நீர் கொழும்பு வலய போக்குவரத்து பிரிவின் இரு கான்ஸ்டபிள்கள் துரத்தி வந்த நிலையில், கொள்ளையர்கள் முன்னெடுத்த துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பொலிஸாரும் பதில் தாக்குதல் நடாத்தியதாகவும் அதன் போதே ஒருவர் இந்த சம்பவம் பதிவானதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கேசரிக்கு குறிப்பிட்டார்.
22 வயதான மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
நீர் கொழும்பு நகரில், மணிக் கூட்டு கோபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது அருகே கடமையில் இருந்த பொலிஸ் போக்குவரத்து பிரிவின் கான்ஸ்டபில்கள் இருவர் கொள்ளையர்களை துரத்தி சென்றுள்ளனர். அவர்கள் மினுவாங்கொடை நோக்கி பயணித்துள்ள நிலையில், கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஆடி அம்பலம பகுதியில் வைத்து வைத்து பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர். இதன்போது பொலிஸார் பதிலுக்கு சுட்டதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.