சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் சீட் கிடைக்காததால் விடிய விடிய ரெயிலுக்காக பயணிகள் காத்திருந்தனர். தீபாவளி பண்டிகை நாளை (24-ந் தேதி)வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊருக்கு ரெயில்களில் செல்ல பயணிகள் கூட்டம் ரெயில் நிலையங்களில் அலை மோதி வருகிறது. சென்னையில் முக்கிய ரெயில் நிலையமாக திகழும் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் ரெயிலில் பயணம் செய்ய இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் இடம் கிடைக்காததால் பயணிகள் காத்திருந்தனர். அங்குள்ள பிளாட்பாரங்களில் மற்றும் ஓய்வு அறைகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்தனர்.
ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிவதால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் அனைவருக்கும் சீட் கிடைக்கவில்லை. இதனால் அடுத்து வரும் ரெயிலுக்காக காத்திருக்கிறார்கள். மேலும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு சீட்டுகள் உறுதி படுத்தப்படாததால் ரெயிலில் பயணம் செய்ய முடியாமல் ரெயில் நிலைய பகுதிகளில் தவித்து வருகிறார்கள். ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்காததால் தான் இந்த அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
பண்டிகை காலங்களில் கூடுதல் ரெயில் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் ரெயில்வேக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பெண் பயணி முத்தழகி கூறியதாவது:- தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ரெயிலில் செல்வதற்கு வந்து உள்ளேன். தற்போது ரெயிலில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. ரெயிலில் இடம் கிடைக்காமல் பல்வேறு மக்கள் தவித்து வருகிறார்கள்.
இதை பார்க்கும் போது கூடுதல் பெட்டிகளை ரெயில்களில் இணைத்து மக்களுக்கு பண்டிகை காலங்களில் போதுமான சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் கூடுதலாக சிறப்பு ரெயில்களையும் இயக்க வேண்டும் சொந்த ஊர்களில் ஒவ்வொருவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட விரும்புவார்கள். தற்போதைய சிறப்பு ரெயில்கள் போதவில்லை. இந்த பற்றாக்குறையை போக்க கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் போதுமானதாக இல்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வருடம் தோறும் தீபாவளி பண்டிகை நாட்களில் ரெயிலில் செல்வதற்கு அனைவரும் விரும்புவார்கள். சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எல்லோருக்கும் மிகவும் விருப்பமானதாகும். அதனை கருத்தில் கொண்டு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைத்து பயணிகளை காத்திருப்போர் பட்டியலில் இருந்து அவர்களுக்கு உரிய இட வசதி செய்து கொடுக்க வேண்டும்.பெரும்பாலான மக்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்க வில்லை.
ரெயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து உள்ளது.டிக்கெட் கிடைக்காமல் ஒவ்வொரு வரும் அடுத்து வரும் ரெயிலுக்காக நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை தவிர்க்க ரெயில் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கு ஏற்ப புதிய மாற்று வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இரவு- பகலாக பயணிகள் காத்துக் கிடக்கிறார்கள்.
எப்படியாவது ஊருக்கு போய் வர வேண்டும் முடிவில் அனைவரும் ரெயில் நிலையத்திற்கு வருகிறார்கள். ரெயிலில் போதுமான உரிய இட வசதிகள் இல்லை. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.இதை தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.