நாங்கள் சிறந்த அரசாங்கம் என்று காண்பிப்பதற்காக வரிச்சலுகைகளை வழங்கலாம். ஆனால் வரிச்சலுகைகளை வழங்கிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு என்ன நேர்ந்தது? 22 மில்லியன் சனத்தொகையைக்கொண்ட இலங்கையில் வெறுமனே 40 ஆயிரம் பேர் மாத்திரமே வரி செலுத்தினால், அதனூடாக நாட்டை எவ்வாறு நிர்வகிக்கமுடியும்?
ஆகவே தற்போது நாட்டிற்கு வரிச்சலுகைகளா அல்லது பொருளாதார ஸ்திரத்தன்மையா தேவை என்று சிந்தித்துப்பார்க்கவேண்டும். அதன்படி இப்போது வரிகளை அறவிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும். இப்பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கான உடனடி நடவடிக்கையாக வரி அறவீட்டை மேற்கொள்ளவேண்டியிருக்கின்றது. இது கசப்பான மருந்தாக இருந்தாலும், இதனை அருந்தவேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
‘வீரகேசரி’ நாளிதழுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்வதில் தொடரும் தாமதம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக வரி அறவீட்டை மேற்கொள்வதால் மக்கள்மீது மேலும் அதிகரிக்கும் சுமை என்பன பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
‘நீங்கள் தற்போது பாரிய நெருக்கடியில் இருக்கின்றீர்கள். இதிலிருந்து மீள்வதற்கு உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுங்கள்’ என்றே அனைத்துத்தரப்பினராலும் கூறப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தை நாடியதன் பின்னரே உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியன இணைந்து 700 மில்லியன் டொலர் பெறுமதியான இலகு கடனுதவியை எமக்கு வழங்குவதற்கு முன்வந்தன.
அதனூடாகவே எரிவாயு, எரிபொருள் ஆகியவற்றுக்கான வரிசைகளை இல்லாமல் செய்யவும், உரத்தை விநியோகிக்கவும், பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதாந்தம் குறித்தளவு நிவாரணத்தொகையை வழங்கவும் முடிந்தது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் முதலில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு எம்மை வலியுறுத்தின.
அதேவேளை எந்தவொரு நாடும் தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை வீதம் வரியாக அறவிடப்படவேண்டும் என்பது குறித்த கணிப்பீடொன்றைக் கொண்டிருக்கும். அதன்படி இங்கிலாந்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவீதமானவை வரியாக அறவிடப்படுகின்றன. இருப்பினும் இலங்கையைப் பொறுத்தமட்டில் 1981 ஆம் ஆண்டில் 21 சதவீதமாகக் காணப்பட்ட வரி அறவீடாவது 2019 ஆம் ஆண்டில் 14.5 சதவீதமாகக் குறைவடைந்து, இப்போது 8.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் நாம் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லமுடியாது. இந்த நிலை தொடர்ந்தால் சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்களுக்கான ஊதியத்தை எவ்வாறு செலுத்தமுடியும்? ஓய்வூதியம் பெறுவோருக்கான ஓய்வூதியக்கொடுப்பனவை எவ்வாறு செலுத்தமுடியும்? எவ்வாறு குறைந்த விலைக்கு உரத்தை வழங்கமுடியும்? எவ்வாறு இலவசக்கல்வியையும், இலவச சுகாதாரசேவையையும் வழங்கமுடியும்? 1991 ஆம் ஆண்டில் இந்தியா இதனையொத்த நெருக்கடிக்கு முகங்கொடுத்தது. அதன்விளைவாக அங்கு அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியக்கொடுப்பனவு இல்லாமல்செய்யப்பட்டது. தனியார்மயமாக்கலின் ஊடாக டொலர் உட்பாய்ச்சல் ஊக்குவிக்கப்பட்டது.
எனவே இந்தச் செலவினங்களை ஈடுசெய்யவேண்டுமெனில், முதலாவது தெரிவாகப் பணத்தை அச்சிடவேண்டும். இல்லாவிட்டால் வரிகளை அறவிடவேண்டும். பணத்தை அச்சிட்டதன் விளைவாகவே பணவீக்கம் அதிகரித்து, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து தற்போதைய நெருக்கடி தோற்றம்பெற்றிருக்கின்றது.
எனவே பணத்தை அச்சிடமுடியாது. அதேபோன்று நாங்கள் சிறந்த அரசாங்கம் என்று காண்பிப்பதற்காக வரிச்சலுகைகளை வழங்கலாம். ஆனால் வரிச்சலுகைகளை வழங்கிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு என்ன நேர்ந்தது? 22 மில்லியன் சனத்தொகையைக்கொண்ட இலங்கையில் வெறுமனே 40 ஆயிரம் பேர் மாத்திரமே வரி செலுத்தினால், அதனூடாக நாட்டை எவ்வாறு நிர்வகிக்கமுடியும்? ஆகவே தற்போது நாட்டிற்கு வரிச்சலுகைகளா அல்லது பொருளாதார ஸ்திரத்தன்மையா தேவை என்று சிந்தித்துப்பார்க்கவேண்டும்.
அடுத்த ஒருவருடம் மிகவும் கடினமானதாகவும், கசப்பானதாகவுமே அமையும். ஆனால் வரிகளை அறவிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும். இதற்கான மாற்றுவழி என்ன? ஏற்றுமதியை மையப்படுத்திய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டும். இருப்பினும் அதனை ஓரிரு தினங்களில் செய்யமுடியாது.
ஆகவே இப்பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கான உடனடி நடவடிக்கையாக வரி அறவீட்டை மேற்கொள்ளவேண்டியிருக்கின்றது. இது கசப்பான மருந்தாக இருந்தாலும், இதனை அருந்தவேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்று சுட்டிக்காட்டினார்.