சர்வதேசப்பொறிமுறை அவசியம்

250 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிதாக நிறைவேற்றப்பட்டிருக்கும் 51/1 தீர்மானம் குறித்தும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் கடந்த வாரம் நாட்டிற்கு வருகைதந்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூவிடம் எடுத்துரைத்துள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகள், இலங்கையில் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்கும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு முடிவிற்குக்கொண்டுவரப்படுவதற்கும் சர்வதேசப்பொறிமுறையொன்று அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் வட, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கத்தை முடிவிற்குக்கொண்டுவருவதற்குமான அழுத்தங்களையும் அமெரிக்கா வழங்கவேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் இலங்கைக்கு வருகைதந்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ கடந்த புதன்கிழமை (19) சிவில் சமூகப்பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கும் பங்கேற்றிருந்தார்.

இச்சந்திப்பின்போது அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிதாக நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானம் குறித்தும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அமுல்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டிய சிவில் சமூகப்பிரதிநிதிகள், இலங்கையில் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்கும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு முடிவிற்குக்கொண்டுவரப்படுவதற்கும் சர்வதேசப்பொறிமுறையொன்று அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோன்று உள்ளகப்பொறிமுறை என்பது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடு என்றும் அதன்மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாக அனைவரும் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள் என்றும் அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலரிடம் எடுத்துரைத்த அவர்கள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற உள்ளகப்பொறிமுறைகளால் எவ்வித பலனும் கிட்டவில்லை என்றும் தற்போது புதிதாக ஸ்தாபிக்கவிருப்பதாகக் கூறப்படும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறை வெறும் கண்துடைப்பு நடவடிக்கை மாத்திரமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அடுத்ததாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம், உத்தேச புனர்வாழ்வுப்பணியகச்சட்டமூலம் என்பன குறித்தும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.

‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கும் அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றபோதிலும், உண்மையில் அச்சட்டத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதன்படி ஏற்கனவே பயங்கரவாத்தடைச்சட்டத்தின்கீழ் புனர்வாழ்வளித்தல் தொடர்பான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதுடன் தற்போது புனர்வாழ்வுப்பணியகச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அதேபோன்று பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், அமைதிப்போராட்டக்காரர்களும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.

சர்வதேச பிரகடனமான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் ஊடாக மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக அச்சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது’ என்று அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலரிடம் சுட்டிக்காட்டிய சிவில் சமூகப்பிரதிநிதிகள், பயங்கரவாதத்தடைச்சட்டத்திற்கு மாற்றீடாகப் புதியதொரு சட்டம் உருவாக்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும், மாறாக குற்றவியல் சட்டக்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் அதனூடாகக் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றப்புலனாய்வுப்பிரிவு மற்றும் நிதிக்குற்றப்புலனாய்வுப்பிரிவின் ஊடாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் வங்கிக்கணக்குகள் ஆராயப்படுவதாகவும் சில கணக்குகள் முடக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர்கள், அக்கணக்குகளிலுள்ள நிதி எதற்காக, எங்கிருந்து வைப்புச்செய்யப்பட்டிருக்கின்றது எனக் கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி உதவிகள் தேவைப்படும் நிலையிலுள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்கென அங்கீகாரமளிக்கப்பட்ட சில கட்டமைப்புக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி முடக்கப்பட்டிருப்பதாகவும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலாளர் டொனால்ட் லூவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து அரச நிர்வாகக்கட்டமைப்பில் தொடரும் அதிகரித்த இராணுவமயமாக்கம் மற்றும் கட்டமைப்பு ரீதியாகவே வேரூன்றியிருக்கும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு என்பன பற்றி அமெரிக்கப்பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கப்பட்டதுடன் வட, கிழக்கில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கலை முடிவிற்குக்கொண்டுவருதற்கான தலையீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை வழங்கவேண்டும் என்றும் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு மாகாணசபைத்தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித்தேர்தல் ஆகியவற்றை இயலுமானவரை விரைவாக நடத்தவேண்டியதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டிய சிவில் சமூகப்பிரதிநிதிகள், தற்போதைய ஜனாதிபதி மக்களால் தெரிவுசெய்யப்படவில்லை என்றும், எனவே மீண்டுமொரு மக்கள் புரட்சி வெடிக்கும் பட்சத்தில் நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் பாதிப்படையும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.