யாழில் போலியாக உறுதி செய்யப்பட்டு காணி மோசடி

189 0

யாழில் போலியாக உறுதி நிறைவேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட காணி மோசடி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மன்றில் முற்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் மறைந்த தம்பதியரின் சார்பில் நிறைவேற்றப்பட்ட அறுதி உறுதியின் மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன் தினம் (20.10.2022) முற்படுத்திய பொலிஸார் பி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். யாழ்ப்பாண மேலதிக நீதிவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இது போன்ற மோசடிகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளார். அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குறித்த காணி சந்தேகநபரால் வேறு ஒருவருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே விசாரணைகள் நிறைவடையாததால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறும் பொலிஸார் சமர்ப்பணம் செய்துள்ளனர்.

சந்தேகநபர் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையாகி பிணை விண்ணப்பம் தொடர்பில் சமர்ப்பணத்தை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“இந்த வழக்குடன் தொடர்புய சிலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் அவர்கள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

முழு மோசடியையும் எனது கட்சிக்காரர் மீது சுமத்தி மற்றவர்களை பாதுகாக்கும் விதத்தில் புலன்விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.

இயற்கை எய்திய இருவரின் கையொப்பங்கள் இடப்பட்டு காணியின் உரிமை மாற்றம் செய்வதற்கு எனது கட்சிக்காரரை தந்திரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

உறுதியில் சாட்சிகளாக கையொப்பம் இட்ட இருவரில் ஒருவரே முதன்மை சூத்திரதாரி.

இதில் பிரபல கல்லூரி ஒன்றின் முன்னாள் அதிபரும் சம்பந்தப்பட்டுள்ளார்.

யாழில் போலியாக உறுதி செய்யப்பட்டு காணி மோசடி:நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Land Scam Jaffna Court Order To Those Involved

கையூட்டு வழக்கு ஒன்றில் சந்தேக நபராக ஏற்கனவே பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் போலிக் கையொப்பங்களில் ஒன்றையும் இட்டுள்ளார்.

மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ள காணி பின்னர் இன்னொரு நபருக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதல் உறுதியில் கையொப்பம் இட்ட ஒரு சாட்சி இரண்டாவது உறுதியிலும் அதே போன்று கையொப்பம் இட்டுள்ளார். இது தனி ஒரு மனிதர் மட்டும் செய்யக்கூடிய மோசடி அல்ல.

இந்த கூட்டு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் எனது கட்சிக்காரரை மட்டும் குற்றவாளி ஆக்குவது எந்த வகையில் நியாயமாகும்.

முழு உண்மையும் வெளிக்கொணரப்பட வேண்டும். சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் நேர்மையாக செயற்படவில்லை.

எனவே, சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரத்துக்கு குறையாத பதவி நிலை கொண்ட அதிகாரி ஒருவர் புலன் விசாரணையைப் பொறுப்பேற்க வேண்டும்.

அதற்கான பணிப்புரையை வழங்க நீதிமன்றம் முன்வர வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.  சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவு நடத்தி வரும் புலன் விசாரணைக்கு கடும் அதிருப்தியை மன்று வெளியிட்டுள்ளது.

இறந்த தம்பதிகளின் பேரில் நிறைவேற்றப்பட்ட அறுதி உறுதியில் சாட்சிகளாக கையொப்பம் இட்ட இரண்டு நபர்கள் மற்றும் உறுதியை நிறைவேற்றிய நொத்தாரிசு ஆகியோரை ஏன் இன்னமும் முற்படுத்தவில்லை என்று மன்று பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்ட ஏற்பாடுகளுக்கு புறம்பாக போலி உறுதி மூலம் தனது பெயருக்கு காணியை உரிமை மாற்றம் செய்த நபருடன் மட்டும் இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை. இதில் ஒரு குழுவே சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பது தெரிகின்றதாக குறிப்பிடுகின்றது. காணி மோசடிகள் நிகழ்ந்து வருவதற்கு சில நொத்தாரிசுகளின் செயற்பாடுகளும் காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூழ்நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் காணிகளின் விலை எகிறிக் கொண்டிருக்கின்றது என்பதை மறுக்க முடியாததாக சுட்டிக்காட்டப்படுகின்றது.