உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் மக்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்துதல் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல், நேற்று (21) உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தலைமையில் நடைபெற்றது.
புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சினால், சமய ஸ்தலங்களை மையமாகக் கொண்டு இந்த வேலைதிட்டத்தை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கூடாக 14,022 கிராம சேவகர் பிரிவுகளிலும் அமுல்படுத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, குறித்த பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்படும் உணவு பரிமாற்ற மையமானது, அப்பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய தேவைக்கு அதிகமான உணவுகளை சேகரித்து உணவு வங்கிக்கு வழங்கும். பின்னர் அந்த உணவு, உணவு வங்கியூடாக உணவு பற்றாக்குறையுடைய குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும்.
மேலும் இச்செயற்பாட்டின் மூலம் தேவைக்கதிகமாக உள்ள உணவை குறித்த பிரதேச வாசிகளிடையே மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களில் உள்ளவர்களிடையேயும் பகிர்ந்தளிக்க முடிவதனால் உணவு வீண் விரயம் செய்யப்படுவதை தடுக்க முடியும்.
இக்கலந்துரையாடலில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்கள் மற்றும் அவற்றின் அபிவிருத்தி ஆகியவற்றை திட்டமிடுவது தொடர்பான செயன்முறைக் குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.