திலினிக்கு எதிராக முறைப்பாடளிக்க அரசியல்வாதிகள் பிரபலங்கள் தயக்கம்

142 0

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியின் நிறுவனத்தில் முதலீடுகளை செய்துள்ள பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் பல்வேறு காரணங்களுக்காக பொலிஸில் முறைப்பாடு செய்யத் தயங்குவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம்  கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு நேற்று (19) அறிவித்தது.

திலினி பிரியமாலிக்கு சொந்தமான திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் கீழ் வரும்  ஏழு வர்த்தக நிறுவனங்களில் தமது பணத்தை முதலீடு செய்தவர்களில் நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகள் மற்றும்  பிரபலங்கள்  அடங்குவதாகவும்  , கைப்பற்றப்பட்ட திலினியின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து அந்த தகவல்கள்  வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிஐடி மன்றில் தெரிவித்தது.

இந்த மோசடி விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் திப்பட்டுவெவ தலைமையில், விசாரணை அதிகாரியான சி.ஐ.டி. விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகலவின் கீழான குழுவினர் இந்த விடயங்களை மன்றில் முன் வைத்தனர்.

திலினி பிரியமாலிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 12 முறைப்பாடுகளில்  மூன்று முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்தே  குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர், இந்த விடயங்களை முன் வைத்தனர்.

நேற்றைய தினம்  வழக்கானது, கோட்டை மேலதிக நீதிவான் ஷிலனி பெரேரா முன்னிலையிலேயே விசாரிக்கப்பட்டது.

இதன்போது இரு வழக்குகள் தொடர்பில் திலினி பிரியமாலியும், மற்றொரு வழக்கு தொடர்பில் திலினிக்கு மேலதிகமாக அவரது கணவராக சித்திரிக்கப்பட்டுள்ள இசுரு பண்டாரவும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.  அவர்கள் விஷேட காரணிகளுக்காக மன்றில் நேரில் ஆஜர் செய்யப்படாது ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக நீதிவான் முன்னிலையில் காண்பிக்கப்பட்டனர். இதனைவிட நேற்று கோட்டை பொலிசாரும் புதிதாக ஒரு வழக்கை தாக்கல் செய்து அதில் திலினி பிரியமாலியை சந்தேக நபராக பெயரிட்டனர்.

இந்நிலையில் நேற்று நீதிமன்றுக்கு சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன் வைக்கையில்,

‘கனம் நீதிவான் அவர்களே, வர்த்தகர் ஒருவரிடம் (அப்துல் சத்தார்) 226 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி சந்தேக நபரான திலினி பிரியமாளியை நாம் ஏற்கனவே மன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதிக்கு அமைய,  நான்கு இடங்களுக்கு அழைத்து சென்று சோதனை செய்து விசாரணை செய்தோம். வத்தளை பகுதியில் அவரது தங்குமிடம்,  கிருலப்பனை சொகுசு தொடர்மாடியில் உள்ள தங்குமிடம், உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 34 ஆவது மாடியில் உள்ள அவரது நிறுவன அலுவலகம்,  கோட்டை செத்தம் வீதியில் உள்ள கிரிஷ் எனும் நிறுவன வளாகத்துக்கு அழைத்து சென்று சோதனை செய்தோம்.

இதன்போது விசாரணைக்கு தேவையான பல ஆவணங்கள், டிஜிட்டல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரான திலினியின் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட  கணினிகளில் 5 கணினிகளின்  வன் தட்டுக்கள் ( ஹார்ட் டிஸ்க்) இல்லை என்பது எமது பரிசீலனையின் போது தெரியவந்தது. இது குறித்து விசாரித்து வருகின்றோம்.

சந்தேக நபரின் திகோ  குழுமம் எனும் நாமத்தின் கீழ் கட்டுமானம், பொழுதுபோக்கு, ரத்தினம் மற்றும் நகைகள், ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தகம் தொடர்பிலான  7  நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவங்கள் எவை ஊடாகவும் வருமானம் ஈட்டப்படவில்லை.  மோசடியான முறையில் பெறப்பட்ட பணத்தில், வருமானம் ஈட்டாமல் அவற்றை நடாத்திச் சென்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

சந்தேக நபர் வருமானம் ஈட்டாமல் தனது நிறுவனத்தை நடத்துவதற்காக மாதாந்தம் 4.1 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம், சந்தேக நபர் 350 இலட்சம் ரூபாவை செலவிட்டு திரைப்பட அறிமுக விழா ஒன்றினை நடாத்தியுள்ளார்.

இதனைவிட 55 இலட்சம் ரூபாவைச் செலவிட்டு ஒரு காட்சிப்படுத்தல் மற்றும் விரிவாக்கல் வேலைகளை செய்துள்ளார். எனினும் இவற்றுக்கான பணம் எங்கிருந்து எப்படி கிடைத்தது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.  விசாரணையின் படி, இந்த செலவுகள் அனைத்தும் மோசடி செய்யப்பட்ட பணம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான திலினியின்  கையடக்கத் தொலைபேசி தற்போது, சி.ஐ.டி. பொறுப்பிலேயே உள்ளது. அதில் பல குறுஞ்ச் செய்திகள், குரல் பதிவுகள் உள்ளன.  அதனை ஆராயும் போது பல அரசியல்வாதிகள், பிரபலங்கள்  குறித்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளமையும் அவர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளமையும் தெளிவாகிறது.

எனினும் அவர்களில் பலர் முறைப்பாடளிக்க தயங்குகின்றனர்.  அவ்வாறு அவர்கள் மிகப் பெரும் பணத் தொகை மோசடிகள் தொடர்பில் முறைப்பாடளிக்க தயங்குவது பிரச்சினைக்குரியது.

கடந்த 2022 ஜனவரி மாதம் முதல்  ஜூலை வரையான காலப்பகுதியில் சந்தேக நபரான திலினியின் வங்கிக் கணக்கில் 3,000 மில்லியன் ரூபா பறிமாற்றப்பட்டுள்ளது.   அந்த பணத் தொகை எங்கிருந்து, யாரால், எப்படி அக்கணக்குக்கு வைப்புச் செய்யப்பட்டது மற்றும் அதனை எவ்வாறு எதற்காக சந்தேக நபர் செலவிட்டார் என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

சந்தேக நபர் தண்டனை சட்டக் கோவையின் 386,387,400 ஆம் அத்தியாயங்களின் கீழும்,  கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழும்  கடனை மீள அறவீடு செய்தல் தொடர்பிலான சட்டத்தின் 25 (1) ஆம் அத்தியாயத்தின் கீழும்  குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கருதி இவ்விசாரணைகள் நடக்கின்றன.

எனவே விசாரணைகள் ஆரம்ப நிலையில் இருப்பதாலும், மேலும் பலரைக் கைது செய்ய வேண்டி இருப்பதாலும் திலினிக்கு பிணையளிக்கக் கூடாது.

அதற்கு பல காரணங்கள் உள்ளன. பிரதான சந்தேகநபரான திலினி பிரியமாலிக்கு எதிராக தற்போது நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஏழு  வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதே போல சந்தேகநபர் விளக்கமறியலில் இருந்தபோது 3 கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தியுள்ளார். இதில் இரு கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பில் விசாரணை நடக்கின்றது.

அதன் பிரகாரம் 11 இலக்கங்களுக்கு 22 அழைப்புக்க் ஒரு கையடக்கத் தொலைபேசி ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதில் 4 பேரை நாம் விசாரித்துள்ளோம்.  சிலருக்கு அழைத்து, சில நபர்களின் தொலைபேசி இலக்கங்களை சந்தேக நபரான திலினி கோரியுள்ளமை அவர்களது வாக்கு மூலங்கள் ஊடாக தெரியவந்தது.

ஒரு நபருக்கு 4 அழைப்புக்கள் எடுக்கப்பட்டிருந்தன. அந்த நபரை அழைத்து விசாரித்தோம்.  இதன்போது தனக்கு பிணைப் பெற 300 இலட்சம் ரூபாவை கோரியுள்ளார்.

2 தொலைபேசிகள் தொடர்பில் மேலதிக அறிக்கை பெற வேண்டியுள்ளது. எனவே சந்தேக நபருக்கு பிணையளித்தால் அது விசாரணைகளை பாதிக்கும். எனவே பிணையளிக்கக் கூடாது. பிணை சட்டத்தின் 14 ஆவது அத்தியாயத்தின் கீழ் பிணையை மறுப்பதற்கான அத்தனை நிபந்தனைகளும் உள்ளன. இவருக்கு பிணையளித்தால் பொது மக்கள் கூட கொந்தளிப்பர். ‘ என சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட வர்த்தகர் அப்துல் சத்தார் சார்பில் மன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனுடன் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆஜரானார்.  அவர்  இந்த மோசடிகளில் திலினி பிரியமாலியைப் போன்றே ஜானகி சிறிவர்தன எனும் பெண்ணும் தொடர்பு பட்டுள்ளதாகவும் அவரையும் கைது செய்ய வேண்டும் என கோரினார்.

குறித்த பெண்ணே பலரை திலினியிடம் முதலீடு செய்ய தூண்டியுள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட பணத்துக்கு என்ன நடந்தது என்பது அவரைக் கைது செய்தால் தெரியவரும் எனவும் அவர் வாதிட்டார்.

திலினி பிரியமாலி சார்பில்  ரகித ராஜபக்சவுடன் ஆஜரான சட்டத்தரணி தசுன் நாகஹவத்த, சி.ஐ.டி தமது கட்சிக்காரருக்கு எதிராக மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக குற்றம் சுமத்தினார்.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பிணை வழங்கக் கூடிய குற்றங்கள் என்பதால், பிணையளிக்குமாறு அவர்  கோரினார். அத்துடன் முறைப்பாடளித்தவர்கள் அந்த பணத்தை எவ்வாறு சம்பாதித்தார்கள் என்பதை தேட வேண்டும் என குறிப்பிட்ட அவர், தனது செவை பெறுநர் மோசடி செய்யவில்லை என வாதிட்டார்.

இவ்வாறான நிலையில்  60,000 அமரிக்க டொலர்கள், ஒரு இலட்சம் அவுஸ்திரேலிய டொலர்கள், தங்க நகைகளை இழந்த வர்த்தகர் கமல்ஹாசன் வழங்கிய முறைப்பாடு தொடர்பிலான வழக்கு தொடர்பில் திலினி மற்றும் அவரது கணவராக அடையாளப்படுத்தப்பட்ட சுரங்க பண்டார தொடர்பில் மன்றுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சம்பத் வங்கியின்  பிரதி பொது முகாமையாளர் ஒருவர் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இதன்போது சி.ஐ.டி.யினர் கூறினர்.

இதனைவிட மோசடி செய்யப்பட்ட தங்க நகைகள் ஒரு தங்க நகை காட்சியறைக்கு விற்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் உள்ளதாகவும் அது குறித்து விசாரணை நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  2 ஆவது சந்தேக நபரான சுரங்க பண்டார இந்த சம்பவத்துடன் நேரடி தொடர்புபட்டுள்ளதாக  சி.ஐ.டி.யினர் சுட்டிக்கடடினர்.

எனினும் இதன்போது 2 ஆம் சந்தேக நபரான சுரங்க பண்டாரவுக்காக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ரொஷான் தெஹிவல , குற்றச்சாட்டை மறுத்து, விசாரணைகளை துரிதப்படுத்த கோரினார்.

இதனைவிட 44 மில்லியன் ரூபா மோசடி ஒன்று தொடர்பிலும் திலினி பிரியமலைக்கு எதிராக மற்றொரு வழக்கு தொடர்பில் சி.ஐ.டி. நேற்று மன்றுக்கு அறிவித்தது. அந்த வழக்கில்  மதுக நிரஞ்சன் எனும் ஒருவரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பால் கோரப்பட்டது.

இவ்வாறான நிலையில்  கோட்டை பொலிஸாரால் மற்றொரு வழக்கு நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டது. பெண்ணொருவரை ஏமாற்றி அவரது 8 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை அபகரித்தமை தொடர்பில் அவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த கொழும்பு கோட்டை பதில் நீதவான் ஷிலினி பெரேரா, சந்தேக நபர்களான  திலினி பிரியமாலி மற்றும் அவரது வர்த்தக பங்குதாரரான கணவர் என அடையாளப்படுத்தப்பட்ட  இசுரு பண்டார ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.