கைதானவர்களின் விபரங்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

226 0

“பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானவர்களின் விபரங்களை வெளியிடுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற முக்கிய  தீர்மானத்தினை  தகவல் அறியும் ஆணைக்குழு  அறிவித்துள்ளது”

இலங்கையில் 1979ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில் அது குறித்து கடந்த கால அரசாங்கங்கள் அலட்சியப்போக்கையே வெளிப்படுத்தியிருந்தன.

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் மீதான மக்கள் வெறுப்பும் அதன் மூலம் உருவான காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தின் போது கூட இச்சட்டம் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் ரணில் விக் கிரமசிங்க ஜனாதிபதியானவுடன் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினரை கைது செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

இச்சட்டத்தை தடை செய்யக்கோரி நாடெங்கினும் கையெழுத்து வேட்டைகள் இவ்வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் இடையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், மக்கள் போராட்டம் மற்றும் ஜனாதிபதி , பிரதமரின் பதவி விலகல் சம்பவங்களால் அது மறக்கப்பட்டு விட்டது. ஆனால் தற்போது மீண்டும் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யலாம் என்ற விடயமே கைது செய்யப்பட்டவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான அதேவேளை அவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பும் ஒன்றாக இருக்கின்றது. சாட்சிகள் இன்றி கைது செய்யவும் காலவரையறை இன்றி அவர்களை தடுத்து வைக்கவும் வழி செய்யும் இச்சட்டம் குறித்து எவருமே சட்டரீதியாக கேள்விகள் எழுப்ப முடியாத சூழ்நிலைகள் கடந்த 43வருடங்களாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் அவ்வாறு தடுத்து வைக்கப்படும் இடங்களையும் எவருக்கும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்ற விவகாரம் இச்சட்டத்தின் பாரதூரமான தன்மையை காட்டி நிற்கின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு வலுவூட்டும் முகமாக அவசரகால சட்டமும் இணைந்து செயற்படுவது மற்றுமோர் அபாயகரமான விடயமாகும்.

இந்நிலையில் அவ்வாறு தடுத்து வைக்கப்படுவோரின் நிலைமைகள் என்ன,  அவர்கள் சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்துள்ளனரா, இதில் பெண்கள் ,கர்ப்பிணிப்பெண்கள் எத்தனைப்பேர் , மனநல சிகிச்சை பெறுவோர் எத்தனைப்பேர், 18–30 வயதுக்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகளின் விபரங்கள், கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,

மாவட்ட ரீதியாக அவர்களின் வதிவிடம் போன்ற கேள்விகளை முன்வைத்து சட்டத்தரணியும்  சமூக செயற்பாட்டாளருமான   சுரேன் டி பெரேரா தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக கடந்த வருடம் நவம்பர்  மாதம் 20 ஆம் திகதி இலங்கை பொலிஸ் தலைமையகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும் இது குறித்த தகவல்களை வழங்குவதற்கு மறுத்த பொலிஸ் தலைமை காரியாலயத்தின் தகவல் வழங்கும் அதிகாரி, தகவல் அறியும் சட்டத்தின் பிரிவு 43 இன்படி தகவல் என்பது வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வரையறையை விண்ணப்பதாரியின்  கோரிக்கை பூர்த்தி செய்யவில்லையென்றும் தகவலை வழங்க முடியாது என்றும் பதில் அனுப்பியுள்ளார்.

அந்த பதிலில்  அதிருப்தி அடைந்த விண்ணப்பதாரியானவர் குறித்தளிக்கப்பட்ட அதிகாரிக்கு 13 ஆம் திகதி டிசம்பர் மாதம் மீண்டும் மேன்முறையீட்டை செய்துள்ளார்.   எனினும் மேன்முறையீட்டையும் நிராகரித்த குறித்தளிக்கப்பட்ட அதிகாரியானவர், சட்டத்தின் பிரிவு 5 இன் உபவிதிகளின் படி (1– b (1)  இவ்விண்ணப்பத்தை நிராகரிப்பதாக பதில் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து இப்பதிலிலும் அதிருப்தியடைந்த மேன்முறையீட்டாளர்  , தகவல் அறியம் ஆணைக்குழுவுக்கு 08/03/2022 திகதியிடப்பட்ட விண்ணப்பம் மூலம் மேன்முறையீட்டை செய்தார். இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழுவானது இருதரப்பு விசாரணைகளை 15/09/2022 அன்று ஆணைக்குழு முன்பாக முன்னெடுத்திருந்தது.

இங்கு நோக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் பொது அதிகார சபையாக இருக்கும் பொலிஸ் தலைமை காரியாலயத்தின் தகவல் வழங்கும் அதிகாரியும் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியும் இருவேறு காரணங்களை முன்வைத்து இந்த விண்ணப்பத்தை நிராகரித்ததாகும். அதாவது இரு அதிகாரிகளுமே முரண்பட்ட ஒரு முடிவுக்கு வந்துள்ளதை ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டத்தின் பிரிவு 5ஆனது என்ன காரணங்களுக்காக ஒரு தகவல் நிராகரிக்கப்படல் வேண்டும் என்பதை, கோரிக்கை முன்வைப்பவருக்கு தெளிவாக வழங்க வேண்டும் என்றே கூறுகின்றது. ஏனெனில் குறித்த உபவிதிகள் அதில் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.

எனவே பயங்கர வாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டவர்களின் விபரங்கள் , தகவல்கள் , உட்பட மேற்கண்ட தகவல் கோரிக்கையில் உள்ள எந்த ஒரு விடயமும் பிரிவு 5 (1) (b) (i)இல் நிர்ணயிக்கப்பட்ட எல்லையினுள் வராது என்பது ஆணைக்குழுவின் விளக்கமாகும்.

ஏனெனில் குறித்த பிரிவானது தேசிய ஆள்புல இறைமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விடயங்களே நிராகரிக்கப்படலாம் என்று கூறுகின்றது. இங்கு ஆணைக்குழுவின் கேள்வி முக்கியமானது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கர்ப்பிணித்தாய்மார்கள், மனநல சிகிச்சை பெறுபவர்கள், அவர்களின் எண்ணிக்கை மற்றும் தடுத்து வைக்கப்படிருக்கும் இடங்களை வெளிப்படுத்துவதானது எந்த வகையில் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கப்போகின்றது என்பதே அக்கேள்வியாகும்.

ஆனால் அந்த கேள்விகளுக்கு பொலிஸ் தலைமையகத்தின் தகவல் அலுவலர் அல்லது குறித்தளிக்கப்பட்ட அதிகாரி இருவருமே தமது பக்க விளக்கங்களை வழங்கியிருக்கவில்லை. இதேவேளை இந்த மனு மீதான விசாரணையின் போது, குறித்த பொது அதிகார சபை (பொலிஸ் தலைமையகம்) சார்பாக ஆஜராகியிருந்த பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி வசந்த பிட்டியகும்புர , ‘தகவல்களை  வழங்க மறுப்பது பகிரங்க அதிகார சபையின் நிலைப்பாடாகும்‘  என்று தெரிவித்திருக்கின்றாரே ஒழிய அதற்கான விளக்கங்களை அவர் அங்கு தெரிவிக்கவில்லை.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்ட ஆணைக்குழுவானது குறித்தளிக்கப்பட்ட அதிகாரியின் பதிலை நிராகரிப்பதற்கு தீர்மானம் எடுத்தது.

மேலும் இந்த விசாரணைகள் குறித்த இறுதித் தீர்மானத்தை ஆணைக்குழுவானது கடந்த 06/10/2022 அன்று முடிவு செய்தது. இத்தீர்மானமானது ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன,  ஆணையாளர் ஓய்வு பெற்ற நீதியரசர் ரோகிணி வல்கம, ஆணையாளர்களான சட்டத்தரணி கிஷாலி பிண்டோ ஜெயவர்தன மற்றும் சட்டத்தரணி ஜகத் லியனாராய்ச்சி ஆகியோரால் எடுக்கப்பட்டது.

இதன் படி எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்பதாக விண்ணப்பாரியினால் கோரப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் பதில் அளிக்கும்படியும் அதற்கு இணங்க தவறும் பட்சத்தில் 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தின்  பிரிவு 39 இன் பிரகாரம் குறித்த தகவல் அலுவலர் மற்றும் பகிரங்க அதிகார சபைக்கு எதிராக உரிய நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரவும் ஆணைக்குழு தீர்மானிப்பதாக அங்கு கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் எத்தனை இருக்கமானதாக இருந்தாலும் அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்போரின்  தகவல்களை எவரும் பெற்றுக்கொள்வதற்கு தகவல் அறியும் சட்டமூலம் கதவுகளை திறந்து விட்டுள்ளது. இதன் மூலம் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் உறவினர்கள், அவர்களுக்காக ஆஜராகும் சட்டத்தரணிகள், குரல் எழுப்பும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினர் அனைவருக்கும் பாதிக்கப்பட்டோர் சார்பாக ஏதாவதொரு வழியில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வழி பிறந்துள்ளது எனலாம்.

சிவலிங்கம் சிவகுமாரன்