சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையை தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கிராமிய பொருளாதார மையங்களை வலுவூட்டும் பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பில் அம்பாறை மாவட்டத்துக்கான அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (ஒக் 15) அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
இதுவரை நாம் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டிருந்தாலும், எவரும் பட்டினியால் வாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த செயற்திட்டத்தை வெற்றிகொள்வதன் மூலம் உலக உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்கக்கூடியதாக இருக்கும். உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதேவேளை அடுத்த வருடம் முதல் விவசாயம் நவீனமயப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
கடந்த வருடம் அமைச்சின் ஊடாக இயற்கை உரம் விநியோகிக்கப்பட்டது. ஆனால், இம்முறை அவற்றை நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளோம். அந்த நிறுவனங்கள் ஊடாக உரம் விநியோகிப்படும்.
அந்த நிறுவனங்களுக்கு கடந்த வருடங்களில் 8 பில்லியன் ரூபா நிலுவைத் தொகை செலுத்தப்படாமலுள்ளது. எனினும், தற்போது அவற்றை செலுத்துவதற்கு ஆரம்பித்துள்ளோம். இவற்றில் சுமார் 4 பில்லியன் ரூபா வரை செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
சிவில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆராயப்படவுள்ளது.
இங்கு விவசாயம் செய்யும் ஒரு தரப்பினர் குறித்து பேசப்படவில்லை. முப்படையினர் பெருமளவில் பயிரிடுகின்றனர். விசேடமாக அவர்களையும் இந்தத் திட்டத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் முதல் தடவையாக இவ்வாறான செயல்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான நிலைமை இதற்கு முன்னர் இருக்கவில்லை.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது உணவை பெற முடியாத நிலை இருந்தபோதிலும், பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. ஆனால், தற்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போது பொருளாதாரத்தை கடந்த வருடத்தை விடவும் ஓரளவு மீட்டுள்ளோம். இன்னும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒருபக்கம் பணத்தை நாம் அச்சிட்டால், பணவீக்கம் அதிகரிக்கும். கையிருப்பில் உள்ள பணத்துடன் பணிகளை முன்னெடுத்தால் வரையறைகள் ஏற்படுகின்றன.
எமக்கு என்ன உணவு வகைகள் மேலதிகமாக தேவைப்படுகின்றன என்பது குறித்து எமது உணவுப் பாதுகாப்பு செயலணி மூலம் அறிவிக்கப்படும்.
நெல் பயிர்ச்செய்கை குறித்து பிரச்சினை இருக்காது. இந்த நிலைமை தொடர்ந்தால், எமக்கு கையிருப்பு இருக்கும். எனினும், சோளம் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
முடிந்த இடங்களில் அந்தப் பயிர்ச் செய்கையை அதிகரிக்க வேண்டும். கிராமப் புறத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் இந்த செயல் திட்டத்தில் இணைத்துக்கொண்டுள்ளோம். அனைவரும் இதற்காக பணியாற்ற வேண்டும்.
போஷாக்கு குறைபாட்டில் உள்ளவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு உணவை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமொன்று வேண்டும்.
எனவே, இதற்கான உணவு வங்கிகள், உணவுகளை பகிர்ந்தளிக்கும் சமூக சமையலறைகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.
இந்த செயல்திட்டங்களுக்கு அரசாங்கமும் முடிந்தளவு உதவிகளை வழங்கும்.
இந்தக் காலகட்டம் மிகவும் நெருக்கடியானது. எவரையும் பட்டினியில் இருக்க இடமளிக்கக்கூடாது.
நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். ஆனால், பெரும்போகத்தின் விளைச்சல் கிடைத்த பின்னர் இந்த நிலைமையில் முன்னேற்றம் இருக்கும்.
எனினும், 2023ஆம் ஆண்டு இறுதி வரை நாம் இந்த செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தாலும், உலக உணவுப் பற்றாக்குறை இருக்கும் என்பதால் எமது நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
அதன் பின்னரும் நாம் இந்தப் பொறிமுறையை நிறுத்தமாட்டோம். இதன் தொடர்ச்சியாக விவசாயத்தை நவீனமயப்படுத்த வேண்டும்.
எனவே தான் நாம் புதிய செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம். இந்தப் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தப் பணிகளின்போது எமக்கு கட்சி அரசியல் இருக்காது. கட்சி அரசியலை நாம் புறந்தள்ள வேண்டும்.
மக்களின் உணவுப் பிரச்சினையை தீர்க்கும் அரசியலுக்கு நாம் செல்ல வேண்டும். எனவே, சம்பிரதாய அரசியலில் எந்தப் பயனும் இல்லை.
தற்போதிருந்து அடுத்த ஏப்ரல் மாதம் வரை நாம் உற்பத்திகளை முன்னெடுக்க வேண்டும். விசேடமாக பெரும்போகத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்.
அரசியல் பேதங்கள் இன்றி அனைவரும் இணைந்து இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
விவசாய அமைச்சரும் பிரதமரும் இந்தப் பிரதேசத்துக்கு வந்து, இந்தச் செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்து பார்ப்பார்கள். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பணியை முன்னெடுப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன்.
நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் இந்த சவால்களை இதற்கு முன்னர் நாம் எப்போதுமே எதிர்கொண்டதில்லை. எமது பெற்றோர், மூதாதையர் கூட இவ்வாறான சவால்களை எதிர்கொள்ளவில்லை. இது எமக்கு புதிய சவால்.
நாம் சரியாக செயல்பட்டால், இதில் வெற்றியடைந்து, இன்னும் பலம் பெறுவோம்.
எனவே, அடுத்த வருடத்தில், இந்த அடிப்படை பிரச்சினையை தீர்த்துக்கொள்ள நாம் பணியாற்றுவோம் என்றும், இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.