அரசாங்கமானது வன்முறைகளை விடுத்து, மனித உரிமைகளையும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளியையும் உறுதிப்படுத்துவதுடன், தமிழ் மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பிரச்சினைகளுக்குரிய தீர்வை வழங்குவது இன்றியமையாததாகும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன, மத நல்லிணக்கத்துக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ‘சுபீட்சமான நாட்டுக்கான பாதை நல்லிணக்கமே’ எனும் தொனிப்பொருளில் கடந்த சனிக்கிழமை (ஒக் 15) யாழில் கலந்துரையாடல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இதுவரையில் எமது சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் நிகழ்நிலை முறைமையின் ஊடாக 102 கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இக்கலந்துரையாடல்களில் உள்நாட்டவர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் பங்கேற்றிருந்தனர். அதனூடாக பாராளுமன்ற உபகுழுக்களை மேலும் வலுப்படுத்துமாறும், மக்கள் சபையை ஸ்தாபிக்குமாறும் பரிந்துரைத்திருந்தோம்.
அப்பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுடன், அவற்றை செயற்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு எம்மிடம் கோரியிருந்தது.
எனவே, ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை விடுத்து, சிறந்த விடயங்களுக்கு மாத்திரம் ஆதரவளிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
அதேவேளை அரசாங்கம் வன்முறைகளை பிரயோகிப்பதை விடுத்து, மனித உரிமைகளையும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளியையும் உறுதிப்படுத்துவதுடன், தமிழ்மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பிரச்சினைகளுக்குரிய தீர்வை வழங்குவதும் இன்றியமையாததாகும்.
அண்மையில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் சிலருடன் பேசினேன்.
தமது மூதாதையர்கள் இந்த மண்ணில் புதைக்கப்பட்டிருப்பதாகவும், தம்மால் இந்த மண்ணை மறக்கமுடியாது என்று கூறிய அவர்கள், இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கையின் வளர்ச்சிக்கும் அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
எனவே, அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதுடன், அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது அவசியமாகும்.
அதேவேளை சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நாட்டை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.