அரசாங்கத்தின் உள்ளக ரீதியிலான பொறிமுறைகள் எதனையும் ஏற்கோம்

164 0

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் எமக்கான தீர்வைப் பெற்றுத்தரவில்லை. அதேபோன்று கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வை பெற்றுத்தரும் நோக்கில் அவர்களை மனிதாபிமானத்துடன் அணுகவில்லை.

எனவே, உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் உள்ளக ரீதியில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு பொறிமுறையையும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.

நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், அதனை அடிப்படையாகக் கொண்டு உள்ளக ரீதியில் உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ள நிலையில், மேற்படி ஆணைக்குழுவில் கடந்த புதன்கிழமை (ஒக் 12) முன்னிலையாகியிருந்த இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.ஸ்கால்க் தென்னாபிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார்.

அதுமாத்திரமன்றி ஆணைக்குழுவில் கடந்த வெள்ளிக்கிழமை (ஒக் 14) ஆஜரான முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில் அது எவ்விடயங்களை பூர்த்தி செய்யவேண்டும் என்பது பற்றிய பரிந்துரைகளை முன்வைத்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில், அதனை ஏற்பீர்களா என்று வினவியபோதே யோ.கனகரஞ்சனி மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் எமக்கான தீர்வை பெற்றுத்தரவில்லை. அதேபோன்று கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வை பெற்றுத்தரும் நோக்கில் அவர்களை மனிதாபிமானத்துடன் அணுகவில்லை.

ஆகவே, அரசாங்கத்தினால் உருவாக்கப்படக்கூடிய உள்ளகப் பொறிமுறையின் ஊடாக ஒருபோதும் எமக்கான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியாது.

குறிப்பாக, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் போதியளவிலான வெளிப்படைத்தன்மை இல்லை என்பதுடன், இதுவரையில் அதனூடாக எந்தவொரு முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

தற்போது அரசாங்கம் காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு வழங்குவதாக கூறிய 100,000 ரூபா இழப்பீட்டுத்தொகையை 200,000 ரூபாவாக அதிகரித்திருக்கின்றது.

எமது பிள்ளைகளின் பெறுமதி அவ்வளவுதானா? பல கோடி ரூபாவை இழப்பீடாக வழங்கினாலும் நாம் அதனை பெற்றுக்கொள்ளப்போவதில்லை. மாறாக, காணாமல்போன எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துவதும், அவர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதுமே எமது தேவைப்பாடாக இருக்கின்றது.

எனவே, நாம் உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக உள்ளக ரீதியில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதுடன் சர்வதேச சமூகத்திடமிருந்து மாத்திரமே எமக்கான நீதியை எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டார்.