ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்காக தேர்தலை பிற்போட இடமளிக்க முடியாது

124 0

பொதுத்தேர்தலில் இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்திக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்து கொண்டால் மாத்திரமே நாடு ஸ்திரமடையும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவர் தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கும் மக்களாணை கிடையாது,ஆகவே அரசாங்கம் எடுக்கும் எந்த திட்டங்களுக்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை.

அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அரசாங்கம் அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி முடக்கியுள்ளது.போராட்டம் முடிவடைந்து விட்டது இனி முன்னர் செயற்பட்டதை போன்று  செயற்படலாம் என நினைத்துக் கொண்டு செயற்படுகிறது.

தேர்தல் ஒன்று இடம்பெற்றால் நாட்டு மக்கள் அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் என நாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக அரசாங்கம் செயற்படுகிறது.

தேர்தல் முறைமையை புதிதாக திருத்தம் செய்ய வேண்டிய தேவை கிடையாது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையினை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர் நடைமுறைப்படுத்தலாம்,அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

நாடு ஸ்திரனமடைந்ததன் பின்னர் தேர்தலை நடத்த முடியும்,எதிர்வரும் ஓரிரு மாதங்களில் தேர்தலை நடத்த முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்ததக்கது.நாடு ஸ்திரமல்ல,ஐக்கிய தேசிய கட்சி ஸ்திரமடையும் வரை தேர்தலை நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மாகாண சபை தேர்தலை பிற்போட்டதன் பயனை ஐக்கிய தேசிய கட்சி 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பெற்றது.நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை அரசியல் கட்டமைப்பில் இருந்து முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.பொதுத்தேர்தலில் இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்திக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது.2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,இல்லாவிட்டால் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து நீதிமன்றம் செல்ல தீர்மானித்துள்ளோம் என்றார்.