செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலிக்கு எதிராக நேற்று (14) நண்பகலாகும் போது 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு 9 முறைப்பாடுகளும் நீர் கொழும்பு பொலிஸாருக்கு 2 முறைப்பாடுகளுமாக இந்த 11 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கேசரிக்கு உறுதி செய்தார்.
சி.ஐ.டி.யினருக்கு இறுதியாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடானது கொழும்பு 7, கறுவாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் முன் வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த வர்த்தகரிடம், சந்தேக நபரான திலினி பிரியமாலி 75 கோடி ரூபாவை மோசடி செய்ததாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
இந்த வர்த்தகரின் முறைப்பாட்டில், பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை மையப்படுத்தி விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும், விசாரணைகளுக்கு பொறுப்பான உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
’75 கோடியை இழந்த வர்த்தகரின் முறைப்பாட்டில் பல முக்கிய விடயங்கள் உள்ளன. அவரை பிரபல நடிகைகளை கொண்டு அச்சுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.’ என குறித்த உயரதிகாரி கேசரியிடம் கூறினார்.
இந்நிலையில், திலினி பிரியமாலியின் திட்டப்படி செல்வந்தர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரபல நடிகைகள் சிலர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க சி.ஐ.டி.யினர் தீர்மானித்துள்ளனர். அதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரையிலான சி.ஐ.டி. விசாரணைகள் பிரகாரம், திலினி பிரியமாலி குறித்த மோசடி நடவடிக்கைகளை தனியாக முன்னெடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவரின் நெருங்கிய சகாவாக இருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் இம்மோசடிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பது குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
திலினி பிரியமாலியின் கணவராகவும் குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சந்தர்ப்பங்களும் உள்ளதாக கூறும் சி.ஐ.டி.யினர், அவரை பல தடவைகள் விசாரித்துள்ளதாகவும் ஓரிரு நாட்களில் அவரைக் கைது செய்ய வேண்டி வரும் எனவும் தெரிவித்தனர்.
கடந்த 12 ஆம் திகதி சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினர் நான்கு முன்னணி இடங்களுக்கு அழைத்து சென்று திலினியிடம் விசாரணை நடாத்தியுள்ளனர். கோட்டை நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விஷேட அனுமதியின் பிரகாரம், சிறைக்காவலர்களின் பாதுகாப்பின் கீழ் அவர் இவ்வாறு அழைத்து செல்லப்பட்டு, ஸ்தல விசாரணைகள் நடாத்தப்பட்டதாகவும், இதன்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
குறிப்பாக உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மேற்கு கோபுரத்தின் 34 ஆவது மாடியில் உள்ள அவரது அலுவலக சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.
இதனைவிட சி.ஐ.டி.யினர் செய்துள்ள விசாரணைகளில், திலினி பிரியமாலிக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடந்த 2020 ஆம் ஆண்டு 3 இலட்சம் ரூபா மறுக்கப்பட்ட காசோலை ஒன்றினை, கோட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு வழங்கியமை குறித்து வழக்கொன்று இருந்துள்ளமையையும், குறித்த பணத் தொகையை செலுத்தி அவ்வழக்கை அவர் சமாதானமாக முடித்துக்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
திலினி பிரியமாலி மோசடி செய்தோர் அல்லது கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுத்தோர் தொடர்பிலான அனைத்து விபரங்களும் அவரது கையடக்கத் தொலைபேசி ஒன்றிலும், கணினி ஒன்றிலும் இருப்பதாக நம்பும் சி.ஐ.டி.யினர். அவற்றை கைப்பற்றி சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவூடாக ஆய்வு செய்து அறிக்கை பெற நடவடிக்கைஎ எடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணங்கவின் கட்டுப்பாட்டில், பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் மேற்பார்வையில் சிறப்பு குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய சந்தேக நபரான திலினி பிரியமாலி எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் மேலதிக வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.